பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி தலைமையில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் தேசிய மாநாடு

Posted On: 01 SEP 2021 8:36AM by PIB Chennai

குஜராத் மாநிலம் கெவாடியாவில் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் நடைபெற்ற மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் தேசிய மாநாடு 2021க்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சர் டாக்டர் மகேந்திரபாய் முஞ்ச்பாரா, மற்றும் பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி/ சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மிஷன் போஷன் 2.0, மிஷன் வாத்சல்யா மற்றும் மிஷன் சக்தி ஆகிய மூன்று முக்கிய முன்முயற்சிகளை சிறப்பாக அமல்படுத்துவது தொடர்பாக நிகழ்ச்சியில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வின்போது, இரும்பு மனிதர் திரு சர்தார் வல்லபாய் பட்டேலை போற்றும் வகையில் ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் ஊட்டச்சத்து தோட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்' தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைக்கும் வகையில் ஊட்டச்சத்துமிக்க பழச் செடிகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி சுபின் இரானி, ஊட்டச்சத்து மாதம் 2021  இன்று (செப்டம்பர் 1) தொடங்கப்பட உள்ள நிலையில், ஊட்டச்சத்து தோட்டங்களை மேம்படுத்தும் இலக்குகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டார். மிஷன் வாத்சல்யா குறித்துப் பேசிய அவர், சிறார் நீதிச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்தச் சட்டத்தின்கீழ் விதிகளை வடிவமைப்பதற்கு மாநிலங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான பெண்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், பணிக்காக வேறு மாநிலங்களிலிருந்து இடம்பெறும் மகளிர் மற்றும் இளம் பெண்களுக்கு மகளிர் விடுதிகளை ஏற்படுத்தித் தருவது குறித்தும் திட்டமிடுமாறு அவர் யோசனை தெரிவித்தார். மிஷன் சக்தியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், ஒரு நிறுத்த மையங்களை நாட்டின் மீதமுள்ள மாவட்டங்களிலும் தொடங்குமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750955

******

Release ID: 1750955)



(Release ID: 1751059) Visitor Counter : 250