குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

எதிர்கால பெருந்தொற்றுக்களை சிறப்பாக எதிர்கொள்வதற்கு ஆராய்ச்சியை தீவிரப்படுத்துமாறு விஞ்ஞானிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுரை

Posted On: 30 AUG 2021 2:55PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் ஆய்வகமான உடலியல் மற்றும் சார்பு அறிவியலுக்கான பாதுகாப்பு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் முன்களப் பணியாளர்களின் பங்களிப்பை குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று பாராட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற பெருந்தொற்றை சிறப்பாக எதிர்கொள்வதற்காக, தங்களது ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

குடியரசு துணைத் தலைவர் மாளிகைக்கு வருமாறு ஆய்வகத்தைச் சேர்ந்த 25 விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டியும் அவர்களுடன் வந்திருந்தார்.

குழுவினருடன் கலந்துரையாடிய திரு நாயுடு, முன்னெப்போதுமில்லாத சுகாதார நெருக்கடியை பெருந்தொற்று ஏற்படுத்தியிருப்பதாகவும், உலகம் முழுவதும் ஏராளமான மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொவிட்- 19 தொற்றின் சிகிச்சை மற்றும் மேலாண்மைக்காக உரிய காலத்தில் உள்நாட்டு தயாரிப்புகளை உருவாக்கிய உடலியல் மற்றும் சார்பு அறிவியலுக்கான பாதுகாப்பு நிறுவனம் மற்றும் டிஆர்டிஓ-வின் இதர ஆய்வகங்களுக்கு பாராட்டு தெரிவித்த அவர், சார்ஸ் கொவிட் தொற்றின் புதிய வகைகள் பெருகி வரும் சூழ்நிலையில், எதிர்கால அபாயங்களைத் திறம்பட கையாள்வதற்கு எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

கொவிட்-19 சிகிச்சை மற்றும் மேலாண்மையில் டிஆர்டிஓ ஆய்வகங்களால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள ஏராளமான பொருட்கள் மற்றும் உபகரணங்கள் குறித்து குடியரசு துணைத் தலைவரிடம் டாக்டர் சதீஷ் ரெட்டி எடுத்துரைத்தார்.

விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களை அழைத்து அவர்களுடன் தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டதற்காக குடியரசு துணைத் தலைவருக்கு டாக்டர் ரெட்டி நன்றி தெரிவித்தார்.

ஆய்வகத்தின் இயக்குநர் டாக்டர் ராஜீவ் வர்ஷ்னேவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750406

                                                                                           ------



(Release ID: 1750433) Visitor Counter : 242