மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

உற்பத்தியை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் திறன் கட்டமைப்பு, உந்துசக்தியாக விளங்குகிறது: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 12 AUG 2021 1:51PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் பொருளாதாரம் விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாகவும், இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதாகவும் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். உற்பத்தியை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் திறன் கட்டமைப்பு, உந்துசக்தியாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கிய வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்முனைவுஎன்ற தலைப்பில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு காணொலி மாநாட்டில்   கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

21-ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற திறன்களை நமது இளைஞர்களுக்கு வழங்குவதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். தேசிய கல்விக் கொள்கை 2020-இல் திட்டமிடப்பட்டுள்ளதற்கு இணங்க, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கல்வி மற்றும் திறன்களுக்கு இடையேயான இணைப்பை மேலும் வலுப்படுத்த அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

 

பெருந்தொற்றின்போது கல்வி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் பாதிக்கப்பட்ட போதும், மின்னணு வாயிலாக கல்விப் பணிகள் தொடர்வதை அரசு உறுதி செய்ததாக அமைச்சர் கூறினார். வரும் காலங்களில் ஒவ்வொரு கிராமமும் அதிவிரைவு இணைய வசதியுடன் இணைக்கப்படும் என்றும், இது போன்ற மின்னணுமயமாக்கல் நடவடிக்கைகளால் புதிய கல்வி, திறன் மற்றும் தொழில்முனைவு சூழலியல் உருவாக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசிரியர்கள், சமூக கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், தொழில்நுட்பம், சமூகத்திற்கு மாற்று வடிவம் அளிப்பதாகவும் திரு பிரதான் குறிப்பிட்டார். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமுதாயத்தின் மாற்றத்தைக் கருதி, நமது ஆசிரியர்களின் திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தைக் கொண்டாடும் தருணத்தில், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை முன்னெடுத்துச் செல்லவுள்ள நமது இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று திரு தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745099

******

 

 

(Release ID: 1745099)



(Release ID: 1745121) Visitor Counter : 162