சுற்றுலா அமைச்சகம்

50 கோடி தடுப்பூசிகள் சுற்றுலாத் துறைக்கு மிகப் பெரிய ஊக்கத்தை அளிக்கும்: திரு.கிஷன் ரெட்டி

Posted On: 09 AUG 2021 4:11PM by PIB Chennai

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் 50 கோடியைத் தாண்டியுள்ளது சுற்றுலாத் துறைக்கு மிகப் பெரிய ஊக்கமாக அமையும் என மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கிஷன் ரெட்டி கூறினார்.

மத்திய அமைச்சர் இது பற்றி கூறும்போது, சுற்றுலாத் துறை மீட்சிக்கு தடுப்பூசிகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார். அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் வெளிநாட்டு பயணிகள் நம்பிக்கை அதிகரித்து சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைவதோடு, உள்நாட்டு சுற்றுலாவும் இயல்பு நிலைக்குத் திரும்பும்என்றார்.

பொதுமக்களும், சுற்றுலா துறை சார்ந்தவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், இதன் மூலம் அவர்கள் வைரஸ் தொற்றில்  இருந்து தப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், பொதுமக்கள் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு முறைகளான முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசிகள் செலுத்தும் பணி வேகமாக நடைபெற பிரதமர் திரு.நரேந்திர மோடி எடுத்த சீரிய நடவடிக்கைகள் தான் காரணம் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். மேலும், தற்போது நாம் காணும் முடிவுகள் அனைத்தும் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் எங்கள் அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பயன் என்றும் அவர் கூறினார்.

அரசு தடுப்பூசி தயாரிப்புக்கு ஊக்கமளித்து வழிகாட்டியதால்தான் இன்று உலகில் வேறு எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744080

*****************

 



(Release ID: 1744220) Visitor Counter : 235