இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியி்ல் ஆண்களுக்கான ப்ரீ ஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் மல்யுத்த வீரர் ரவி குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்
Posted On:
05 AUG 2021 5:55PM by PIB Chennai
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியி்ல் ஆண்களுக்கான ப்ரீ ஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் மல்யுத்த வீரர் ரவி குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான ப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தின் இறுதிப்போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் இந்தியாவின் மல்யுத்த வீரர் ரவி குமார் தாஹியா, இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ரஷ்ய வீரர் ஜார் உகுவேவுடன் மோதினார். இதில் 4-7 என்ற கணக்கில் ரவி குமார் தாஹியா தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் சுஷில் குமாருக்கு அடுத்தபடியாக இவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில், மீராபாய் சானு, பி.வி.சிந்து, லவ்லினா பார்கோஹைன், இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு அடுத்தபடியாக இந்தியா பெற்ற 5வது பதக்கம் இது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சுட்டுரையில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் ரவி தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றதால் இந்தியா பெருமிதம் அடைகிறது. மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் திரும்பி வந்து வெற்றி பெற்றுள்ளீர்கள். உண்மையான சேம்பியனாக, உங்கள் உள்பலத்தையும் காட்டியுள்ளீர்கள். மிகச் சிறப்பான வெற்றி பெற்றதற்கும் மற்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்கும் வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டுரையில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ ரவிக்குமார் தாஹியா குறிப்பிடத்தக்க ஒரு மல்யுத்த வீரர்! அவரது போராட்டக் குணமும் உறுதியும் சிறப்பானவை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனைகளில் இந்தியா பெருமை கொள்கிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் சுட்டுரையில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘ இந்தியா வென்றுள்ளது! ரவி, நீங்கள் சாதித்துள்ளீர்கள்! வாழ்த்துகள்! உங்களின் உணர்வுப்பூர்வமான ஆட்டம், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம்! என்ன ஒரு அற்புதமான பயணம்! இந்திய விளையாட்டுக்கு எவ்வளவு அற்புதமான நாள்!’’ என குறிப்பிட்டுள்ளார்.
ரவி குமார் தாஹியா, ஹரியானாவின் சோனிபட் மாவட்டம் நஹ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்ப பின்னணியைக் கொண்டவர். அவரது தந்தை, அவரது கிராமத்தில் நெல் வயலில் வேலை பார்ப்பவர். மல்யுத்தத்தை ரவி குமார் தாஹியா தனது 10 வயதில் தொடங்கினார். 2017ம் ஆண்டு நடந்த சீனியர் தேசியளவிலான போட்டியில் அவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவருக்கு எந்த நிறுவனமும் உதவ முன்வரவில்லை. காயத்திலிருந்து மீண்டு வர, அவர் தனது நலன் விரும்பிகளை சார்ந்திருந்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742844
-----
(Release ID: 1742943)
Visitor Counter : 333