இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தாயகம் திரும்பிய ஒலிம்பிக் வெற்றி வீராங்கனை பி வி சிந்துவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

Posted On: 03 AUG 2021 7:41PM by PIB Chennai

டோக்கியோ 2020-ல் வெண்கலம் வென்று இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணியாக உருவெடுத்த பின்னர் முதல் முறையாகத் தாயகம் திரும்பிய பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்துவுக்கு பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் இன்று நடத்தினார்.

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணையமைச்சர் திரு நிஷித் பிரமானிக், விளையாட்டுத் துறைச் செயலாளர் திரு ரவி மிட்டல் மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

சிந்துவின் பெற்றோர் திருமதி பி விஜயா மற்றும் திரு பி வி ரமணா ஹைதராபாத்தில் இருந்து வந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் தாக்கூர், இந்தியாவின் சிறந்த ஒலிம்பிக் வீரர்களில் சிந்துவும் ஒருவர் என்றும் இந்தியாவின் அடையாளமாக விளங்கி, நாட்டுக்காக விளையாட விரும்பும் அனைவருக்கும் அவர் ஊக்கமளிக்கிறார் என்றும் கூறினார்.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன்னர் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சிந்து உரையாடினார் என்றும், ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு சிந்துவை முதலில் அழைத்த நபர் பிரதமர் தான் என்றும் அமைச்சர் கூறினார்.

திருமதி நிர்மலா சீதாராமன் பேசுகையில், சிந்து ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனை என்றும், அவர் மீண்டும் மீண்டும் அதை நிரூபித்து வருவதாகவும் கூறினார். இனி வரும் தலைமுறைகளுக்கு பெரிய ஊக்கமாக சிந்து திகழ்வார் என்று அவர் கூறினார்.

ஏற்புரை ஆற்றிய சிந்து, “இந்தியா முழுவதிலும் இருந்து பல கோடிக்கணக்கானோர் என்னை வாழ்த்தியதன் காரணமாகவே இந்த வெற்றி சாத்தியமாகி உள்ளது. எனது பெற்றோர், பயிற்சியாளர், ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742018

------


(Release ID: 1742069) Visitor Counter : 254