பிரதமர் அலுவலகம்
குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்
முன்பு, மலிவு ரேஷன் திட்டங்களுக்கான நோக்கம் மற்றும் பட்ஜெட் தொடர்ந்து அதிகரித்தது ஆனால் அந்த அளவுக்கு பட்டினியும், ஊட்டச்சத்து குறைபாடும் குறையவில்லை: பிரதமர்
பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்துக்குப்பின், பயனாளிகள் முன்பை விட கிட்டத்தட்ட இரு மடங்கு ரேஷனைப் பெறுகின்றனர்: பிரதமர்
பெருந்தொற்று சமயத்தில் ரூ.2லட்சம் கோடிக்கு மேற்பட்ட செலவில், 80 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுகின்றனர்: பிரதமர்
நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும், எந்த குடிமகனும் பசியுடன் இருக்கவில்லை: பிரதமர்
ஏழைகளின் மேம்பாட்டுக்கு இன்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: பிரதமர்
நமது விளையாட்டு வீரர்களின் புதிய நம்பிக்கை, புதிய இந்தியாவின் அடையாளமாக மாறிவருகிறது: பிரதமர்
50 கோடி இலக்கை நோக்கி நாடு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது: பிரதமர்
சுதந்திர இந்தியாவின் அம்ருத் மஹோத்சவத்தில் நாட்டின் மேம்பாட்டுக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்த நாம் தூய உறுதிமொழி எடுப்போம்: பிரதமர்
Posted On:
03 AUG 2021 2:00PM by PIB Chennai
குஜராத்தில் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திரமோடி இன்று காணொலி மூலம் கலந்துரையாடினார். இத்திட்டம் பற்றி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்த, குஜராத்தில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள், இலவச ரேஷன் பெறுகின்றனர். இந்த இலவச ரேஷன், ஏழைகளின் துயரத்தை குறைத்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. எந்தவித பேரிடராக இருந்தாலும், நாடு தன்னுடன் உள்ளது என்பதை ஏழைகள் உணர வேண்டும் என பிரதமர் கூறினார்.
சுதந்திரத்துக்குப்பின், ஏழைகளுக்கு மலிவு விலை உணவு அளிப்பது பற்றி கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசுமும் பேசியது. மலிவு ரேஷன் திட்டங்களுக்கான நோக்கம் மற்றும் பட்ஜெட் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது, ஆனால், அதன் தாக்கம் குறைவாக இருந்திருக்க வேண்டும். நாட்டின் உணவு தானிய இருப்பு தொடர்ந்து அதிகரித்தது, ஆனால், அந்த அளவுக்கு பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறையவில்லை. பயனுள்ள விநியோக முறை குறைவாக இருப்பது இதற்கு முக்கிய காரணம். இந்த நிலையை மாற்ற, 2014ம் ஆண்டுக்கு பிறகு, பணிகள் தொடங்கப்பட்டன. புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டனர் மற்றும் ரேஷன் அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டன. இது, நூற்றாண்டின் மிகப் பெரிய பேரிடர் ஏற்பட்டபோதும், ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் அச்சுறுத்தப்பட்டபோதும் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டபோதும், ஒரு குடிமகன் கூட பட்டினி இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய உதவியது. பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை உலகம் அங்கீகரித்தது. பெருந்தொற்று நேரத்தில் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு, ரூ.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட செலவில் இலவச ரேஷன் கிடைத்தது என பிரதமர் கூறினார்.
இன்று கோதுமை கிலோ ரூ.2க்கும் அரிசி கிலோ ரூ.3க்கும் வழங்கப்படுவதோடு, 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி ஒவ்வொரு பயனாளிக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது என பிரதமர் கூறினார். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட, சுமார் இரு மடங்கு ரேஷன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் தீபாவளி வரை தொடரப்போகிறது. எந்த ஏழையும் பசியுடன் தூங்க மாட்டார்கள் என பிரதமர் கூறினார். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி, புலம் பெயர் தொழிலாளர்களை கவனித்துக் கொண்டதற்கு குஜராத் அரசை அவர் பாராட்டினார்.
உள்கட்டமைப்புக்கு, நாடு இன்று லட்சக்கணக்கான கோடியை செலவு செய்கிறது, அதே நேரத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, எளிதாக வாழ்வதற்கான புதிய அளவுருக்களையும் அமைக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டுக்கு இன்று அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வீடுகளைப் பெற்றுள்ளன, 10 கோடி குடும்பங்கள் கழிவறைகளைப் பெற்றுள்ளன. அந்தளவுக்கு அவர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், ஜன்-தன் வங்கிக் கணக்கு முறையிலும் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என பிரதமர் கூறினார்.
அதிகாரமயமாக்கலுக்கு, சுகாதாரம், கல்வி, வசதிகள் மற்றும் மாண்பை உறுதி செய்ய தொடர்ச்சியான கடின உழைப்பு தேவை என பிரதமர் கூறினார். ஆயுஷ்மான் திட்டம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு, சாலைகள், இலவச சமையல் எரிவாயு மற்றும் மின் இணைப்பு, முத்ரா, திட்டம், ஸ்வாநிதி திட்டம் போன்றவை ஏழைகளின் கவுரவமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன மற்றும் மேம்பாட்டுக்கான வழியாக மாறியுள்ளன.
இது போன்ற பல பணிகள் குஜராத் உட்பட நாடு முழுவதும் உள்ளன. இதன் காரணமாக, நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் நம்பிக்கையும் இன்று அதிகரிக்கிறது. இந்த தன்னம்பிக்கைதான், ஒவ்வொரு சவாலையும் சமாளிக்கும், ஒவ்வொரு கனவையும் நனவாக்கும் சூத்திரம்.
இந்தியாவின் ஒலிம்பிக் குழுவினர் பற்றி குறிப்பிட்டு பிரதமர் கூறுகையில், நூற்றாண்டு பேரிடர் ஏற்பட்டபோதும், ஒலிம்பிக் போட்டிக்கு அதிகளவிலான விளையாட்டு வீரர்கள் தகுதி பெற்றனர். அவர்கள் தகுதி மட்டும் பெறவில்லை, சிறந்த முன்னணி விளையாட்டு வீரர்களுடன் விளையாடும் போது, அவர்களுக்கு கடுமையான போராட்டத்தை அளிக்கின்றனர்.
இந்திய விளையாட்டு வீரர்களின் வைராக்கியம், ஆர்வம் மற்றும் உணர்வு இன்று மிக அதிகமாக உள்ளது. சரியான, திறமையான நபர்கள் அடையாளம் காணப்பட்டு ஊக்குவிக்கப்படும்போது, இந்த நம்பிக்கை வருகிறது என அவர் கூறினார். நடைமுறை மாறும்போதும், வெளிப்படைத்தன்மை ஏற்படும்போதும் இந்த நம்பிக்கை வருகிறது. இந்த புதிய நம்பிக்கை, புதிய இந்தியாவின் அடையாளமாக மாறிவருகிறது.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திலும், நமது தடுப்பூசி திட்டத்திலும், இந்த நம்பிக்கையை மக்கள் தொடர வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். உலகளாவிய பெருந்தொற்று சூழலில், நமது கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
50 கோடி தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி நாடு வேகமாக சென்று கொண்டிருப்பதாகவும், 3.5 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை நோக்கி குஜராத்தும் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறினார். அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் கூட்டத்தில் இருப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டை மேம்படுத்த, புதிய எழுச்சியை உருவாக்குவதற்கான ஒரு தீர்மானத்தை பிரதமர் நாட்டு மக்களுக்கு அளித்தார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவில், இந்த தூய உறுதிமொழியை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த தீர்மானங்களில், ஏழைகள், பணக்காரர், ஆண்கள் மற்றும் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு என கூறி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.
சுமார் 948 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள், கடந்தாண்டு ஒதுக்கப்பட்டது. கொவிட் சமயத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய, இது இயல்பான ஒதுக்கீட்டைவிட 50 சதவீதம் அதிகம். 2020-21ம் ஆண்டில் உணவு மானியத்துக்கு சுமார் ரூ.2.84 லட்சம் கோடி செலவிடப்பட்டது.
குஜராத்தில் 3.3 கோடிக்கும் மேற்பட்ட தகுதியான பயனாளிகள் 25.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் பெற்றனர். இதற்கு 5 ஆயிரம் கோடிக்கும் மேல் மானியமாக செலவிடப்பட்டது.
புலம்பெயர் பயனாளிகளுக்கு உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது.
******
(Release ID: 1741883)
Visitor Counter : 403
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam