நிதி அமைச்சகம்

161-வது வருமான வரி தினம்: நாட்டை கட்டமைப்பதை நோக்கி ஒரு பயணம்

Posted On: 24 JUL 2021 12:21PM by PIB Chennai

161-வது வருமான வரி தினம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் நாடு முழுவதும் உள்ள அதன் அலுவலகங்களில் இன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஒருங்கிணைப்பு, சிறப்பாக செயல்படுதல், ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான பணி ஆகிய வருமான வரித்துறையின் விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில், ஐசிஏஐ மண்டல கிளைகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் உள்ளிட்ட வெளிப்புற பங்குதாரர்கள் உடனான இணைய கருத்தரங்கு, மரம் நடும் விழா, தடுப்புமருந்து முகாம்கள், கொரோனா நிவாரணத்தில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு பாராட்டு கடிதங்கள் வழங்குதல், பணியின் போது கொவிட்டால் உயிரிழந்த அலுவலர்களின் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வருமான வரித் துறைக்கு வாழ்த்துச்செய்தி வழங்கிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2014-ம் ஆண்டு முதல் அரசு மேற்கொண்டுவரும் சீர்திருத்தங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருவதற்காக துறைக்கு பாராட்டு தெரிவித்தார். வரியை நேர்மையாக செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றும் பங்குக்காக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வரி செலுத்தும் முறையை எளிமைப் படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருவதற்காகவும், துறையின் செயல்பாடுகளை நியாயமானதாகவும் வெளிப்படைத்தன்மை மிக்கதாகவும் ஆக்குவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்காகவும் வருமானவரித் துறையை அவர் பாராட்டினார்.

பெருந்தொற்றால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இடையிலும் தங்களது கடமையை ஆற்றி வரும் வரி செலுத்துவோரை அவர் பாராட்டினார். பெருந்தொற்று காரணமாக பணியின் போது உயிரிழந்த அலுவலர்களின் பங்களிப்பை நாடு என்றைக்கும் மறக்காது என்று அவர் கூறினார்.

வரி வசூல் மற்றும் வரி கொள்கைகளை நியாயமான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க வகையில் செயல்படுத்துதல் ஆகிய இரட்டை பணிகளை வருமானவரித்துறை சிறப்பாக செய்து வருவதாக நிதி இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். பெரும்பாலான செயல்முறைகள் ஆன்லைன் தளத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் வரி செலுத்துவோர் வருமானவரி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவை மிகவும் குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

நேரடி வரிகளை நிர்வாகிக்கும் முகமையாக நாட்டுக்கு மிகவும் சிறப்பான சேவையை வருமான வரித்துறை ஆற்றி வருவதாக நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் காரட் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார். வரி என்பது அரசுக்கான வருமானத்தின் ஆதாரம் மட்டுமே அல்ல  என்றும் சமூக பொருளாதார நோக்கங்களை அடைவதற்கான சிறப்பான ஒரு உபகரணம் என்றும் அவர் கூறினார். காலத்திற்கு ஏற்றவாறு துடிப்பான முறையில் தன்னை நிரூபித்து வரும் வருமான வரித் துறையை அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1738493

*****************



(Release ID: 1738642) Visitor Counter : 242