மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை: மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிக்கை

Posted On: 22 JUL 2021 4:47PM by PIB Chennai

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என  மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் இன்று அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் சிலரது போன் எண்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக, ஊடகம் ஒன்றில் கடந்த ஜூலை 18ம் தேதி வெளியான தகவல் குறித்து மாநிலங்களவையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிக்கை தாக்கல் செய்து பேசியதாவது:

மாண்புமிகு மாநிலங்களவை தலைவர் அவர்களே,

பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து நான் விளக்கமளிக்க விரும்புகிறேன்.

மிகவும் பரபரப்பான செய்தி ஒன்று இணையதளம் ஒன்றில்  வெளியிடப்பட்டது.

அந்த செய்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் போகிற போக்கில் வைக்கப்பட்டிருந்தன.

கூட்டமைப்பு ஒன்றுக்கு 50,000 தொலைபேசி எண்களுடன் கூடிய தரவுதளத்துக்கான அணுகல் கிடைத்திருப்பதே இச்செய்திக்கான அடிப்படை. இந்த தொலைப்பேசி எண்களுடன் தொடர்புடைய நபர்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள் என்பதே குற்றச்சாட்டு ஆகும். அதே சமயம், கீழ்கண்டவாறு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது:

தரவில் இருந்த எண்ணுக்கான தொலைப்பேசி பெகாசஸ்ஸால் பாதிக்கப்பட்டுள்ளதா அல்லது ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா என்று தெரிவிக்கப்படவில்லை.

ஹேக் செய்வதற்கான முயற்சி செய்யப்பட்டதா அல்லது வேவு பார்க்கப்பட்டதா என்பதை தொலைப்பேசியை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் கூறமுடியாது.”

எனவே, தரவில் எண் இருக்கும் காரணத்தாலேயே வேவு பார்க்கப்பட்டதாக பொருள் கிடையாது என்று அந்த செய்தியே கூறுகிறது.

தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பின் காரணமாக, மத்திய மற்றும் மாநில முகமைகளால் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கு நன்கு நிறுவப்பட்ட முறை இந்தியாவில் உள்ளது. இந்திய தந்தி சட்டம், 1885-ன் பிரிவு 5(2) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2020-ன் 69-ம் பிரிவின் கீழ் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கான வேண்டுகோள்கள் வைக்கப்பட வேண்டும்.

மாண்புமிகு மாநிலங்களவை தலைவர் அவர்களே,

நிறைவாக நான் கூற விரும்புவது என்னவென்றால்:

* பட்டியலில் உள்ள எண்கள் வேவுபார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார்.

* வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது.

* சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன.

மாண்புமிகு மாநிலங்களவை தலைவர் அவர்களே,

இந்த விஷயத்தை தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்புக்கு ஆதாரம் இல்லை என்பது நன்கு புலப்படும்.

நன்றி, மாண்புமிகு மாநிலங்களவை தலைவர் அவர்களே.”

----



(Release ID: 1737891) Visitor Counter : 359