பிரதமர் அலுவலகம்

2021 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் நிகழ்த்திய உரை

இதுவரை 40 கோடி இந்தியர்கள் தடுப்பூசிகளைத் தங்கள் கைகளில் போட்டுக் கொண்டு ‘பாகுபலியாக’ மாறியுள்ளனர்: பிரதமர்

நாடாளுமன்றத்தில் பெருந்தொற்று குறித்து நேர்மறையான ஆக்கபூர்வ விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்: பிரதமர்

பெருந்தொற்று மீது நாளை மாலை விவாதிக்க நேரம் ஒதுக்குமாறு கட்சித் தலைவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்: பிரதமர்

எதிர்க்கட்சிகள், கடினமான கேள்விகளை எழுப்ப வேண்டும், ஆனால் அமைதியான சூழலில் பதிலளிப்பதற்கு வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும்: பிரதமர்

Posted On: 19 JUL 2021 11:13AM by PIB Chennai

நண்பர்கள் அனைவரையும் வரவேற்பதுடன், நீங்கள் அனைவரும் முதல் தவணை தடுப்பூசியையாவது போட்டுக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இருந்தாலும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி, ஒத்துழைப்பு தருமாறு உங்களையும்  எனது அவை நண்பர்களையும் வேண்டிக்கொள்கிறேன். தடுப்பூசி கைகளில் (இந்தியில் பாஹு) செலுத்தப்படுவதால், அதனைப் போட்டுக்கொள்பவர்கள் பாகுபலியாகிறார்கள்’. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பாகுபலியாவதற்கு ஒரே வழி தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது தான்.

கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் 40 கோடி மக்கள் பாகுபலியாகியுள்ளனர். இந்தப் பணி விரைவாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஒட்டுமொத்த உலகையும், மனித சமூகம் முழுவதையும் பெருந்தொற்று இறுகப் பற்றியுள்ளது. எனவே பெருந்தொற்று பற்றி நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் வகையில்  மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரின் நடைமுறைக்கு உகந்த கருத்துக்களை கேட்பதற்காக இந்த விஷயத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவை சரிசெய்யப்பட்டு, இந்த போராட்டத்தில் நாம் முன்னேறிச் செல்லலாம்.

பெருந்தொற்றின் நிலை குறித்து விரிவான செய்திகளை நான் பகிர வேண்டியிருப்பதால், நாளை மாலை நேரம் ஒதுக்குமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும்  கேட்டுக் கொண்டுள்ளேன். முதலமைச்சர்களை நான் தொடர்ந்து சந்தித்துப் பேசி வருவதால், அவையிலும் அவைக்கு வெளியேயும் அனைத்து கட்சித் தலைவர்களுடன் விவாதத்தை மேற்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். வெவ்வேறு மன்றங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவையில் நடைபெறும் விவாதங்களுடன் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடைபெற்றால் வசதியாக இருக்கும்.

மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் பயனுள்ள விவாதங்கள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெறட்டும். மிகவும் கடினமான மற்றும் கூர்மையான கேள்விகளை எழுப்புமாறு மதிப்புமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளை நான் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அமைதியான சூழலில் அரசு பதிலளிக்க அனுமதி வழங்க வேண்டும். உண்மை, மக்களைச் சென்றடையும் போது ஜனநாயகம் வலுப்பெறுகிறது. மக்களின் நம்பிக்கைக்கு அது வலிமை சேர்ப்பதுடன், வளர்ச்சியின் வேகத்தையும் மேம்படுத்துகிறது.

நண்பர்களே, பெரும்பாலும் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளதால், அவையின் உள்ளே கடந்த முறையைப் போல அல்லாமல் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பணியாற்ற உள்ளனர். உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் நம்பிக்கை மற்றும் லட்சியங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்.

குறிப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****************(Release ID: 1736720) Visitor Counter : 98