பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 நிலை குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமரின் உரை

Posted On: 16 JUL 2021 2:02PM by PIB Chennai

வணக்கம்!

கொரோனாவிற்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்களை நீங்கள் அனைவரும் முன் வைத்துள்ளீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விஷயம் குறித்து வட கிழக்கு மாகாணங்களின் மரியாதைக்குரிய முதலமைச்சர்கள் உடன் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றேன். குறிப்பாக நிலைமை மோசமாக உள்ள மாநிலங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையான நடவடிக்கைகளால் மட்டுமே பிரம்மாண்ட பெருந்தொற்றை நாடு எதிர்கொண்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொண்டு, சிறந்த செயல் முறைகளைப் புரிந்து, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கிய விதம் பாராட்டத்தக்கது. இந்தப் போராட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும் என்பதை அனுபவத்தின் வாயிலாக நாம் கூற முடியும்.

நண்பர்களே,

மூன்றாவது அலை குறித்த அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வரும் சூழலில் நாம் இருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் செய்தி ஓரளவிற்கு உளவியல் ரீதியான நிவாரணத்தை அளிக்கிறது. சரிந்து வரும் இந்த நிலையைக் கருத்தில் கொண்டு இரண்டாவது அலையிலிருந்து முழுவதும் விரைவில் மீண்டு விடுவோம் என்று நிபுணர்களும் நம்பினார்கள். ஆனால் ஒரு சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்ந்து கவலை அளிக்கிறது.

நண்பர்களே,

இந்த கலந்துரையாடலில் ஆறு மாநிலங்கள் நம்மிடையே உள்ளன. கடந்த ஒரு வாரத்தில் சுமார் 80% புதிய பாதிப்புகள் உங்கள் மாநிலங்களில் பதிவாகியுள்ளன. 84% உயிரிழப்புகளும் உங்கள் மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன. இரண்டாவது அலை தொடங்கிய மாநிலங்களில் இயல்பு நிலை முதலில் திரும்பும் என்று முன்னதாக நிபுணர்கள் கருதினார்கள். ஆனால் மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நம் நாட்டிற்கும், நம் அனைவருக்கும் இது மிகுந்த கவலை அளிக்கும் விஷயம். இதேபோன்ற நிலை இரண்டாவது அலை உருவாவதற்கு முன்பு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் காணப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே விரைவில் இந்த நிலை கட்டுக்குள் வராவிட்டால் நிலைமை மிகவும் கடினமானதாகும் என்ற  இயற்கையான அச்சம் அதிகரிக்கிறது. பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் மூன்றாவது அலை உருவாவதை தடுப்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

நண்பர்களே,

நீண்ட காலத்திற்கு பாதிப்பு அதிகரித்தால், கொரோனா தொற்றின் உருமாறும் தன்மை அதிகரிப்பதற்கும், புதிய மாறுபாடுகள் உருவாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே மூன்றாவது அலை வராமல் தடுப்பதற்கு கொரோனா தொற்றுக்கு எதிரான பயனுள்ள முயற்சிகளை அவசியம் எடுக்க வேண்டும். இதற்கான உத்தி நீங்கள் உங்கள் மாநிலங்களிலும், ஒட்டுமொத்த நாட்டிலும் அமல்படுத்தியது தான். நாமும் அதில் அனுபவம் பெற்றிருக்கிறோம். அது, உங்களுக்காக சோதனை செய்யப்பட்ட, நிரூபணமாகியுள்ள வழிமுறையும் கூட. தடுப்பூசியுடன் பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சை ஆகிய உத்திகளில் நாம் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும். மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களிலும் எண்ணிக்கை உயர்ந்து வரும் பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். வட கிழக்குப் பகுதியைச் சேர்ந்த எனது நண்பர்களுடன் உரையாடுகையில், ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கை விதிக்காமல் மாறாக மிகச்சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்களில் கவனம் செலுத்தியதும், இதன் காரணமாக நிலைமை கட்டுக்குள் வந்ததும் தெரியவந்தது. ஒட்டுமொத்த மாநிலத்திலும் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நம்மிடையே தடுப்பூசியும் ஓர் உத்தியாக உள்ளது. தடுப்பூசிகளை சரியாக பயன்படுத்துவதன் மூலம் கொரோனாவினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும். இந்தத் தருணத்தை தங்களது ஆர்டி-பிசிஆர் பரிசோதனையின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் பல்வேறு மாநிலங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதுவும் ஒரு பாராட்டத்தக்க மற்றும் அவசியமான நடவடிக்கை. ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிப்பது தொற்றைத் தடுப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும்.

நண்பர்களே,

அவசர சிகிச்சைப்பிரிவில் புதிய படுக்கைகள்பரிசோதனையின் திறனை அதிகரிப்பது மற்றும் இதர தேவைகளுக்காக அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவியும் அளிக்கப்படுகிறது. ரூ. 23,000 கோடிக்கும் அதிகமான தொகையை அவசரகால கொவிட் எதிர்வினை தொகுப்பாக  அண்மையில் மத்திய அரசு விடுவித்தது. மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், மாநிலங்களில், குறிப்பாக நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய ஊரக பகுதிகளில் காணப்படும் உள்கட்டமைப்பு இடைவெளியை' குறைக்கவும், இந்த நிதியை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பல்வேறு வளங்கள் மற்றும் தரவுகளை பொதுமக்கள் எளிதாக, வெளிப்படைத்தன்மை வாயிலாக அணுகுவதற்கு தகவல் தொழில்நுட்ப அமைப்புமுறைகள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்களை வலுப்படுத்துவதும் அதே அளவு முக்கியம்.  நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் சிகிச்சைக்காக அலைய வேண்டிய அவசியம் இருக்காது.

நண்பர்களே,

உங்கள் மாநிலங்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள 332 அழுத்த விசை தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆலைகளுள் 53 ஆலைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக நான் அறிகிறேன். இந்த பிராணவாயு ஆலைகளை வெகுவிரைவில் அமைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதற்காக ஓர் மூத்த அதிகாரியை நியமித்து 15-20 நாட்களில் இயக்க கதியில் பணியை நிறைவடையச் செய்யுங்கள்.

நண்பர்களே,

குழந்தைகள் பற்றிய மற்றொரு கவலையும் உலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கு முழு ஏற்பாடுகளையும் நாம் செய்ய வேண்டும்.

நண்பர்களே,

கடந்த இரண்டு வாரங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதை நாம் காண்கிறோம். மேற்கில் உள்ள ஐரோப்பா அல்லது அமெரிக்கா அல்லது கிழக்கில் உள்ள நாடுகளான வங்கதேசம், மியான்மர், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்திலும் பாதிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது. சொல்லப்போனால் ஒரு சில இடங்களில் நான்கு மடங்கு உயர்வு, மேலும் சில இடங்களில் 8 மடங்கு, 10 மடங்கு என்று எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது நமக்கும் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்குமான எச்சரிக்கையாகும். கொரோனா நம்மை விட்டு நீங்கவில்லை என்று மக்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த வேண்டும். தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் நிகழ்வுகள் இந்த கவலையை மேலும் அதிகரிக்கிறது. இது குறித்து எனது கவலையை வடகிழக்கு பகுதியில் அனைத்து நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். இன்றும் அதே செய்தியை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இன்று நம்முடன் கலந்து கொண்டுள்ள மாநிலங்களில் பெரு நகரங்களும் அதிக மக்கள் தொகையும் உள்ளன. இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் விழிப்புடன் இருந்து பொது இடங்களில் கூட்ட நெரிசலை தீவிரமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகள், சமூக நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உங்களது பரந்த அனுபவம் இந்த முயற்சியில் பெரும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த முக்கிய கூட்டத்திற்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. அனைத்து மரியாதைக்குரிய முதலமைச்சர்கள் குறிப்பிட்டவாறு நான் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்காக காத்திருக்கிறேன், உங்கள் அனைவருடனும் தொடர்பில் இருக்கிறேன். இந்த முயற்சியில் நமது மாநிலங்களை பாதுகாப்பதற்காகவும், இந்த நெருக்கடியிலிருந்து மனித சமூகத்தை காப்பதற்காகவும் எதிர்காலத்திலும் உங்களுடன் துணை நிற்பேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மிக்க நன்றி.

குறிப்பு: இது, பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

*****************


(Release ID: 1736257) Visitor Counter : 241