பிரதமர் அலுவலகம்

மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


தொழில்நுட்ப தீர்வுகள் விரைந்து கிடைக்கச் செய்வதற்காக இளம் புத்தாக்க நிபுணர்களின் முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு

கற்போரின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான, இடைவெளி இல்லாத மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்கக் கூடிய கல்வி மாதிரிகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டிய தேவை உள்ளது: பிரதம மந்திரி

வரும் பத்தாண்டில் நமது தொழில்நுட்ப மற்றும் ஆர்&டி நிறுவனங்கள் மிக முக்கிய பங்கினை ஆற்றும் – “இந்தியாவின் டெக்கேட்: பிரதம மந்திரி

நடைபெற்று வரும் ஆர்&டி பணிகளை, அதிலும் குறிப்பாக கோவிட் தொடர்புடைய பணிகள் குறித்து பிரதமர் தெரிவித்தார்

Posted On: 08 JUL 2021 2:07PM by PIB Chennai

மத்திய அரசின் நிதியில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் இயக்குனர்களுடன் இன்று (8 ஜுலை 2021) பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி காணொலி கருத்தரங்கு மூலம் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலில் பிரதமருடன் 100க்கும் அதிகமான கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கோவிட் முன்வைத்துள்ள சவால்களைச் சந்தித்து அவற்றை தீர்த்து வைப்பதில் இந்த நிலையங்கள் மேற்கொண்டுள்ள ஆர்&டி பணிகளைப் பிரதம மந்திரி பாராட்டினார். தொழில்நுட்பத் தீர்வுகளை விரைந்து கிடைக்கச் செய்வதற்காக இளம் புத்தாக்க நிபுணர்களின் முயற்சிகளுக்கும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

மாறிவரும் சூழல் மற்றும் உருவாகி வரும் சவால்களுக்கு ஏற்ற வகையில் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியானது தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது எனப் பிரதம மந்திரி தெரிவித்தார். தங்களுக்குத் தாங்களே மீள்புத்தாக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் மீள்மதிப்பீடு செய்தல், நாட்டின் மற்றும் சமுதாயத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப மாற்றுவகை மாதிரிகளையும் புத்தாக்க மாதிரிகளையும் உருவாக்குதல் ஆகியவற்றை இத்தகைய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் தெரிவித்தார். தொடர்ச்சியான இடையூறுகள் மற்றும் மாற்றங்களுக்கு ஏற்ப, நான்காவது தொழில் புரட்சியைக் கவனத்தில் கொண்டு நமது இளைஞர்களை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தயார் செய்ய வேண்டிய தேவை உள்ளது என பிரதம மந்திரி வலியுறுத்தினார்.

கற்போரின் தேவைகளுக்கு ஏற்ப, நெகிழ்வான, இடைவெளி இல்லாத மற்றும் கற்றல் வாய்ப்புகளை வழங்கக் கூடிய கல்வி மாதிரிகளை உருவாக்குவதை நோக்கி முன்னேற வேண்டிய தேவை உள்ளதை பிரதம மந்திரி அடிக்கோடிட்டு உணர்த்தினார். அத்தகைய கல்வி மாதிரிகளின் அடிப்படை மதிப்புகளாக அணுகும் வாய்ப்பு, குறைந்த செலவு, சமநிலை மற்றும் தரம் ஆகியவை இருந்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வருடங்களில் உயர்கல்வியில் சேர்ந்த மொத்த மாணவர் சேர்ப்பு விகிதம் (GER) மேம்பட்டுள்ளதை பிரதமர் பாராட்டினார். உயர்கல்வியை டிஜிட்டல் மயமாக்குதல் என்பது ஜிஇஆர் அதிகரிப்பதில் முக்கிய பங்கினை வகிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனால் மாணவர்கள் உயர்தரத்திலான மற்றும் குறைந்த செலவிலான கல்வியைப் பெற முடியும். ஆன்லைன் இளநிலை மற்றும் முதுநிலை பட்ட படிப்புகளை அறிமுகப்படுத்துவது போன்று டிஜிட்டல் மயமாக்குவதற்கு கல்வி நிலையங்கள் எடுத்து வரும் பல்வேறு முன்னெடுப்புகளையும் பிரதம மந்திரி பாராட்டினார்.

இந்திய மொழிகளில் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதற்கும் பிராந்திய மொழிகளில் சர்வதேச ஆய்வு இதழ்களை மொழிபெயர்க்கவும் தேவையான சூழல்சார் அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவையையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்திய சுதந்திரத்தின் 100ஆம் ஆண்டைக் கொண்டாடும் போது, அதாவது வருகின்ற 25 ஆண்டுகளில் இந்தியாவின் ஆசைகள் மற்றும் கனவுகளுக்கான அடிப்படையை சுய-சார்பு இந்தியா இயக்கம் உருவாக்கித் தரும் என்றும் குறிப்பிட்டார். வரும் பத்தாண்டுகளில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆர்&டி நிறுவனங்கள் மிக முக்கிய பங்கினை ஆற்றும்.  இந்தப் பத்தாண்டு “இந்தியாவின் டெக்கேட் (“India’s Techade”) என்று அழைக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, வேளாண்மை, பாதுகாப்பு மற்றும் சைபர் தொழில்நுட்பங்களில் அதிநவீன எதிர்கால தொழில்நுட்பங்களை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டிய தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் மிகத் தரமான உள்கட்டமைப்பு வசதி இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது எனப் பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் அணிகலன்கள், மெய்நிகர் அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் உதவியாளர் ஆகியவற்றோடு தொடர்புடைய உற்பத்திப் பொருட்கள் சாதாரண மனிதருக்கும் சென்று சேர்வதை அப்போதுதான் உறுதிப்படுத்த முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஐஐஎஸ் பெங்களூருவின் பேரா.கோவிந்தன் ரெங்கராஜன், ஐஐடி பம்பாயின் பேரா.சுபாசிஸ் சௌத்ரி, ஐஐடி மெட்ராசின் பாஸ்கர் ராமமூர்த்தி, ஐஐடி கான்பூரின் பேரா.அபய் கரன்திகர் ஆகியோர் பிரதமருக்கு தங்களுடைய எடுத்துரைப்புகளை முன்வைத்தனர். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்திட்டங்கள், கல்விசார் பணிகள் மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய ஆராய்ச்சிகளையும் அவர்கள் எடுத்துரைத்தனர்.

கோவிட் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சிகள் குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை, கோவிட் தடுப்பூசி கண்டுபிடித்தல், உள்நாட்டு ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், புற்றுநோய் செல் சிகிச்சை, மாடுலர் மருத்துவமனைகள், தொற்றுக்குவி மையத்தை கணித்தல், வென்ட்டிலேட்டர் உற்பத்தி முதலானவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய தொழில் உத்திகள் குறித்தும் இவர்கள் பிரதமருக்கு விளக்கி கூறினார்கள். அதே போன்று ரோபோட்டிக்ஸ், ட்ரோன், ஆன்லைன் கல்வி, பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளையும் எடுத்துரைத்தனர். மாறிவரும் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகள் உட்பட புதிய பாட வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறித்தும் பிரதமருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

மத்திய கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இணையமைச்சர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

******


(Release ID: 1733758) Visitor Counter : 334