உள்துறை அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொவிட்-19 நிலைமையை மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு செய்தார்
Posted On:
07 JUL 2021 5:34PM by PIB Chennai
அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கொவிட்-19 நிலைமையை ஆய்வு செய்வதற்கான கூட்டத்திற்கு மத்திய உள்துறை செயலாளர் இன்று தலைமை வகித்தார்.
அனைத்து வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் நிலைமை, உயிரிழப்புகள் விகிதம், தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் மற்றும் தடுப்பு மருந்து வழங்கல் நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக நாட்டிலுள்ள 73 மாவட்டங்களில் 46 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதாகவும் வழிகாட்டுதல்களின் படி கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தின்போது அறிவுறுத்தப்பட்டது.
2021 ஜூன் 29-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவில் குறிப்பிட்டுள்ளவாறு, பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பு மருந்து மற்றும் முறையான கொவிட் நடத்தை விதிமுறை எனும் ஐந்து முனை யுக்தியை கடைபிடிக்குமாறு மத்திய உள்துறை செயலாளர் கேட்டுக்கொண்டார்.
மாவட்டம் மற்றும் நகர அளவில் நிலைமையை நெருங்கி கண்காணிக்குமாறும், எங்கெல்லாம் பாதிப்புகள் அதிகமாக தென்படுகின்றனவோ அங்கெல்லாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன.
தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் அதிகமுள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை படிப்படியாக அமல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம். முறையான கொவிட் நடத்தை விதிமுறை தவறாமல் கடைப்படிக்கப்பட வேண்டும் என்றும் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்க அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை ஈடுபடுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், சுகாதார முதன்மை செயலாளர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்), என் சி டி சி இயக்குநர் மற்றும் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733404
----
(Release ID: 1733466)
Visitor Counter : 279