பிரதமர் அலுவலகம்

பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 24 JUN 2021 9:56PM by PIB Chennai

மாண்புமிகு பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சற்று முன்பு முடிவடைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், வளர்ச்சியை நோக்கியும் எடுக்கப்பட்ட ஆக்கபூர்வமான முயற்சி இது. மிகவும் சுமுகமான முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.  இந்திய ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சாசனத்தின் மீதும் தங்களுக்குள்ள முழுமையான நம்பிக்கையை பங்கேற்ற அனைத்து தலைவர்களும் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது குறித்து அனைத்து தலைவர்களிடமும் உள்துறை அமைச்சர் விளக்கினார்.

ஒவ்வொரு கட்சியின் வாதங்களையும், கருத்துக்களையும் பிரதமர் உன்னிப்பாகக் கவனித்தார். திறந்த மனதுடன் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதை அவர் பாராட்டினார். இந்தக் கூட்டத்தில் முக்கியமான இரண்டு விஷயங்களை பிரதமர் சிறப்பாக வலியுறுத்தினார். ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை அடிமட்ட அளவில் கொண்டு  அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும் என்று அவர் கூறினார். இரண்டாவதாக, ஜம்மு காஷ்மீரில் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்பட வேண்டும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வளர்ச்சி சென்றடைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள்  பங்கேற்பதற்கான சூழலையும், ஒத்துழைப்பையும் கொண்டு வருவது அவசியமாகும்.

ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்துள்ளதை மாண்புமிகு பிரதமர் குறிப்பிட்டார். பாதுகாப்பு நிலையும் முன்னேறியுள்ளதாக அவர் தெரிவித்தார். சுமார் 12,000 கோடி ரூபாய் தேர்தல் முடிந்ததும் பஞ்சாயத்துக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சியை வேகப்படுத்தும்.

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக நடைமுறைகளை, அதாவது  சட்டமன்ற தேர்தல் குறித்த நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியது அடுத்த முக்கிய நடவடிக்கை என பிரதமர் கூறினார். தொகுதி மறுவரையறை பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு பிராந்தியமும், ஒவ்வொரு பிரிவும் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும். தலித்துகள், பிற்படுத்தப்படோர், பழங்குடியினருக்கு முறையான பிரதிநிதித்துவம் அளிப்பது அவசியமாகும்.

தொகுதி மறுவரையறை பணியில் அனைவரும் கலந்து கொள்வது பற்றி விரிவான விவாதம் நடைபெற்றது. இந்த நடைமுறையில் கலந்துக் கொள்ள பங்கேற்ற அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டன.

ஜம்மு காஷ்மீரை அமைதி மற்றும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அனைவரின் ஒத்துழைப்பையும் பிரதமர் கோரினார். வன்முறை வளையத்தில் இருந்து விடுபட்டு, ஜம்மு காஷ்மீர் ஸ்திரத்தன்மையை நோக்கி நடைபோடுவதாக அவர் கூறினார். மக்களிடையே புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது.

இந்த நம்பிக்கையை வலுப்படுத்த அனைவரும் இரவு பகலாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். இன்றைய கூட்டம் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், ஜம்மு காஷ்மீரில்  முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொண்டுவருவதற்கான மிக முக்கிய நடவடிக்கையாகும். இன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

பொறுப்பு துறப்பு; இது தோராயமான மொழி பெயர்ப்பு. மூல அறிக்கை இந்தியில் வெளியிடப்பட்டது.

*****************



(Release ID: 1730382) Visitor Counter : 168