தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மின்னணு அலுவலக நடவடிக்கைகளினால் 100% காகிதமற்ற பணிகளை மேற்கொள்கிறது பிரச்சார் பாரதி

Posted On: 24 JUN 2021 1:47PM by PIB Chennai

2 ஆண்டுகளில் பிரச்சார் பாரதியின் 577 மையங்களில், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலியின் 22,348 ஊழியர்களால் மின்னணு அலுவலகப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

பெருந்தொற்று காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே பணி செய்ய வேண்டிய தருணத்தில், பிரச்சார் பாரதியின் மின்னணு அலுவலகம் வாயிலான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்பு அவர்களுக்கு உதவிகரமாக இருந்தது.

பிரச்சார் பாரதியின் பணிகளை மேம்படுத்தவும், காகிதமற்றதாக மாற்றவும், கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்னணு அலுவலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 577 பிரச்சார் பாரதி மையங்களில் 10% மையங்கள் 2019-ஆம் ஆண்டும் (ஆகஸ்ட்- டிசம்பர்), 74%, 2020-ஆம் ஆண்டும், எஞ்சியுள்ள 16% மையங்கள் கடந்த ஜூன் 18-ஆம் தேதியும் மின்னணு அலுவலக சேவையில் தங்களை இணைத்துக் கொண்டன.

விரைவான மற்றும் வெளிப்படைத்தன்மை மிக்க சேவையை வழங்கும் விதமாக சுமார் 50000 கோப்புகள் கணினி மயமாக்கப்பட்டிருப்பதுடன், ஒவ்வொரு கோப்பின் நிலை குறித்தும் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கோப்பு சரிபார்க்கும் பணி முழுவதும் நிறைவேற சராசரியாக ஒரு வார காலம் தேவைப்பட்ட நிலையில் மின்னணு அலுவலகம் வாயிலாக இந்த எண்ணிக்கை பெருவாரியாகக் குறைந்து, 2 முதல் 24 மணி நேரத்திற்குள் தற்போது முடிவடைகிறது.

இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சரிபார்க்கப்பட்ட கோப்புகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் அதே காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சரிபார்க்கப்பட்ட கோப்புகளின் சராசரி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன.

பிரச்சார் பாரதியில்  அதிகபட்ச மின்னணு கோப்புகளை சரி பார்த்த அமைப்புகளுள் (அகில இந்திய வானொலி- தூர்தர்ஷன்) தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகம், தூர்தர்ஷன்  தலைமை இயக்குநர் அலுவலகம், அகில இந்திய வானொலி தலைமை இயக்குநர் அலுவலகம், தூர்தர்ஷன் செய்திகள் தலைமை இயக்குநர் அலுவலகம், அகில இந்திய வானொலி செய்திகள் தலைமை இயக்குநர் அலுவலகம் ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த முன்முயற்சியால் 2019 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை காகிதங்களுக்கு செலவிடப்படும் தொகையில் 45% சேமிக்கப்பட்டு, பிரச்சார் பாரதியின் நிர்வாகம் காகிதமற்றதாக மாற்றப்பட்டுள்ளது. கரியமில பயன்பாட்டை இந்த முயற்சி குறைத்திருப்பதுடன் பெருந்தொற்றின்போது  பரவலைக் குறைக்கும் வகையில் தங்களது வசிப்பிடங்களில் இருந்து ஊழியர்கள் பாதுகாப்பாக பணிபுரியவும் ஏதுவாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729978

                                                                                           -----(Release ID: 1730031) Visitor Counter : 196