தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

கொவிட் தொற்று காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான நலத்திட்ட நடவடிக்கைகள்: துண்டு பிரசுரங்களை வெளியிட்டார் மத்திய அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார்

Posted On: 18 JUN 2021 2:54PM by PIB Chennai

கொவிட் தொற்று காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான நலத்திட்ட நடவடிக்கைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை  அமைச்சர் திரு சந்தோஷ் கங்வார் வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

தொழிலாளர்கள் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை செலுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. கொவிட் தொற்று காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின்  நலனுக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்த பலன்களை மக்களிடம் சென்றடைய வைப்பது எங்களின் முயற்சி. கொவிட் தொற்று காரணமாக எழுந்துள்ள சூழலை மத்திய அரசு அறிந்துள்ளது. இந்நேரத்தில், தேவைப்பட்டால் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை காக்க இன்னும் அதிக நடவடிக்கைகளை தொழிலாளர் அமைச்சகம் செய்யும்.

இவ்வாறு அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறினார்.

தொழிலாளர்கள் டெபாசிட்டுடன் தொடர்புடைய காப்பீடு திட்டத்தின் (EDLI) கீழ், தொழிலாளர்களின் குடும்பத்தினர் அனைவரும், இத்திட்டத்தின் பலன்களை பெறலாம்.  தற்போது இத்திட்டத்தின் கீழ், தொழிலாளர் இறந்தால், பணிக்கொடை பெற குறைந்தபட்ச பணிக்காலம் தேவை இல்லை. இபிஎப் சட்டப்படி குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும். தொழிலாளரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு அலுவலகத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், ஒரு ஆண்டில் 91 நாட்களுக்கு 70 சதவீத ஊதியம் வழங்கப்படும்.

கூடுதலாக, இஎஸ்ஐசி திட்டத்தின் கீழ், காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளி இறந்தால், சராசரி தின ஊதியத்தில், 90 சதவீதத்துக்கு சமமான தொகை, தொழிலாளியின் வாழ்க்கைத் துணை, மற்றும் விதவைத் தாய்  ஆகியோருக்கு ஆயுள் முழுவதும் ஓய்வூதியமாக கிடைக்கும். குழந்தைகளுக்கு 25 வயது வரை கிடைக்கும். பெண் குழந்தைகளுக்கு திருமணம் ஆகும் வரை கிடைக்கும்.

காப்பீடு செய்யப்பட்ட தொழிலாளி, கொரோனா பாதிப்பால் இறந்தால், அவரது குடும்பத்தினர் சராசரி தின ஊதியத்தில் 90 சதவீதம் தொகையை மாதந்தோறும், தங்கள் வாழ்நாளில் பெறலாம். இறந்த ஊழியரின் வாழ்க்கைத்துணை ஆண்டுக்கு ரூ.120 செலுத்தி மருத்துவ சிகிச்சை பெறலாம். இத்திட்டம், கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு, 30 நாட்களில் இறந்தவர்களுக்கும் பொருந்தும். 

இத்திட்டம் 24.03.2020-லிருந்து இரண்டாண்டு காலத்துக்கு அமலில் இருக்கும்.

இஎஸ்ஐசி தொடர்பான குறைகள்  15 நாட்களிலும், இபிஎப்ஓ தொடர்பான குறைகள் 7 நாட்களிலும் தீர்க்கப்படும் என அமைச்சர் திரு. சந்தோஷ் கங்வார் தெரிவித்தார்.

குறைதீர்ப்பு விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கலாம்.

www.esic.nic.in

https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Downloads_PDFs/WhatsApp_Helpline.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:   

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728186

*****************



(Release ID: 1728240) Visitor Counter : 272