பிரதமர் அலுவலகம்

பாலைவனமாதல், நில சீரழிவு மற்றும் வறட்சி குறித்த ஐ.நா உயர்மட்ட கூட்டத்தில் பிரதமரின் சிறப்புரை

Posted On: 14 JUN 2021 8:28PM by PIB Chennai

மேன்மைமிகு பொது சபை தலைவர் அவர்களே,

மேன்மைமிகு தாய்மார்களே, பெரியோர்களே,

வணக்கம்.

இந்த உயர்மட்ட கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக பொது சபை தலைவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.

அனைத்து உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளிப்பதற்கான முக்கிய அடிப்படை கட்டமைப்பாக நிலம் விளங்குகிறது. சோகம் என்னவென்றால், இன்றைக்கு உலகின் மூன்றில் இரண்டு பங்கை நில சீர்கேடு பாதிக்கிறது. இதை நாம் தடுக்காமல் விட்டோமானால், நமது சமுதாயங்கள், பொருளாதாரங்கள், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை தரத்தின் அடிப்படைகளையே இது தகர்த்து விடும். எனவே, நிலம் மற்றும் அதன் வளங்கள் மீது கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தத்தை நாம் குறைக்க வேண்டும். அதிகளவிலான பணிகள் நம்முன் உள்ளன. ஆனால் நம்மால் அவற்றை செய்ய முடியும். நாம் இணைந்து அதை செய்ய முடியும்.

தலைவர் அவர்களே,

நிலத்திற்கு இந்தியாவில் எப்போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. புனித பூமியை எங்கள் அன்னையாக நாங்கள் கருதுகிறோம். நில சீர்கேடு குறித்த விஷயங்களை சர்வதேச அமைப்புகளில் இந்தியா முன் நின்று பேசி வருகிறது. நிலத்தின் மீது சிறப்பான அணுகல் மற்றும் தலைமையை வலியுறுத்திய தில்லி பிரகடனம்-2019, பாலின முக்கியத்துவத்துடன் கூடிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. சுமார் 3 மில்லியன் ஹெக்டேர்கள் பரப்பிலான காடு கடந்த 10 வருடங்களில் இந்தியாவில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியாக ஒட்டுமொத்த காடுகளின் அளவு அதிகரித்துள்ளது.

நில சீரழிவை தடுப்பதற்கான தேசிய உறுதியை எட்டும் வகையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம். 2030-க்குள் 26 மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை சீரமைக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். 2.5 முதல் 3 பில்லியன் டன் கரியமில வாயுவுக்கு சமமான கூடுதல் கரிம மடுவை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதியை எட்ட இது உதவும்.

நிலத்தை சீரமைப்பதன் மூலம் நல்ல மண் ஆரோக்கியம், கூடுதல் நில உற்பத்தித் திறன், உணவு பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரம் ஆகியவற்றின் சுழற்சியை தொடங்க முடியும். புதுமையான அணுகுமுறைகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாங்கள் புகுத்தி வருகிறோம். உதாரணமாக, அதிகளவிலான நில சீரழிவு மூலம் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தில் உள்ள ரண்ணில் இருக்கும் பன்னி பகுதியில் குறைந்தளவு மழையே பெய்கிறது. புல்வெளி பகுதிகளை உருவாக்குவதன் மூலம் அங்கு நில சீரமைப்பு செய்யப்படுகிறது. நில சீரழிவை தடுக்க இது உதவுகிறது. கால்நடை வளர்ப்பை இது ஊக்குவிப்பதால், ஊரக நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கும் இது ஆதரவளிக்கிறது. இதே உணர்வோடு நில சீரமைப்பிற்கான செயல்மிகு யுக்திகளை நாம் வகுத்து உள்நாட்டு தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும்.

தலைவர் அவர்களே,

வளர்ந்து வரும் உலகத்திற்கு பெரிய சவாலை நில சீரழிவு விடுக்கிறது. தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு உணர்வோடு, நில சீரமைப்பு யுக்திகளில் சக வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்தியா உதவுகிறது. நில சீரழிவு சிக்கல்களை அறிவியல் முறையில் அணுகுவதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திறன்மிகு மையம் இந்தியாவில் நிறுவப்பட்டு வருகிறது.

தலைவர் அவர்களே,

மனித செயல்பாட்டால் நிலத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வது மனிதகுலத்தின் ஒட்டுமொத்த கடமையாகும். நமது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியம் மிக்க பூமியை விட்டு செல்வது நமது புனித கடமையாகும். இந்த உயர்மட்ட கூட்டத்தின் சிறப்புமிக்க செயல்பாடுகளுக்கு எனது மனமாரந்த வாழ்த்துகள்.

அனைவருக்கும் நன்றி,

அனைவருக்கும் மிக்க நன்றி.

*****************



(Release ID: 1727068) Visitor Counter : 464