வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் நிலையான உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இந்தியா முன்னுரிமை: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

Posted On: 14 JUN 2021 5:51PM by PIB Chennai

இந்தியாவின் தனிநபர் கரியமில வாயு வெளியேற்றம் மிகப்பெரும் பொருளாதாரங்களுள் மிகவும் குறைவாக இருப்பதாகவும், இருந்தபோதும், நிலையான வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகள் மீதான ஐக்கிய நாடுகளின் 2030 திட்டத்தை நோக்கிய பயணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைய இந்தியா உறுதிபூண்டிருப்பதாகவும் மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வர்த்தக மன்றம் 2021-இல் உரையாற்றிய அவர், நமது பருவநிலை இலக்குகளை அடைவதற்காக கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தில் புதிய உத்வேகத்துடன் அனைத்து நாடுகளும் பணியாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார். பருவநிலை நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், வளர்ந்த நாடுகள் தங்களது பயன்பாட்டின் அமைப்பை ஆய்வு செய்து, நிலையான வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பருவநிலை மாற்றம் குறித்தத் தங்களது உறுதித்தன்மையை உலக நாடுகள் பூர்த்தி செய்வதில் ஐக்கிய நாடுகள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு கவனம் செலுத்த வேண்டும் என்று திரு கோயல் தெரிவித்தார். பருவநிலை மாற்றம் சம்பந்தமான பிரச்சினைகளை வர்த்தகப் பேச்சுவார்த்தைகளாக அல்லாமல், பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டு கட்டமைப்பு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் விவாதிக்க வேண்டும். இதுபோன்ற இலக்குகளை அடைவதற்கு வர்த்தக ஒப்பந்தங்கள் சிறந்த தேர்வு அல்ல என்றும் அவர் கூறினார்.

நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், கொவிட் பெருந்தொற்றின்போது 80 கோடி இந்தியர்களுக்கு இலவச உணவு தானியங்களை இந்தியா வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். பொதுமக்களுக்கான எங்களது கொள்முதல் திட்டங்களினால் பசியால் எவரும் உயிரிழக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு இதுபோன்ற ஆதரவை எங்களால் வழங்க முடிகிறது”, என்று அவர் தெரிவித்தார்.

உலகின் நிதி கட்டமைப்பில் அதிகாரம் செலுத்தும் சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகள், வளர்ந்து வரும் மற்றும் குறைந்த வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளின் மீது நியாயமற்ற கடுமையான போக்கைக் கடைப்பிடிக்காது என்றும் திரு கோயல் நம்பிக்கை தெரிவித்தார். இது போன்ற தருணங்களில் கூடுதல் கருணை, தாராளமயம் மற்றும் ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727002

*****************


(Release ID: 1727035)