நிதி அமைச்சகம்

சரக்கு மற்றும் சேவை வரிக் கவுன்சிலின் 44-வது கூட்டம்: டாசிலிசுமாப், அம்ஃபோடெரிசின் பி மருந்துகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 5% வரி நீக்கம்

Posted On: 12 JUN 2021 3:39PM by PIB Chennai

டாசிலிசுமாப், அம்ஃபோடெரிசின் பி ஆகிய மருந்துகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த 5% சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) செப்டம்பர் 30-ஆம் தேதிவரை நீக்க மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றக் கூட்டத்தில், கொவிட்- 19 நிவாரணம் மற்றும் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரிகளை செப்டம்பர் 30, 2021 வரை குறைக்க முடிவு செய்யப்பட்டது.

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில நிதி அமைச்சகங்களின் உயரதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்கள்.

கூட்டத்தின் இதர முக்கியப் பரிந்துரைகள்:

•     ஹெப்பாரின் போன்று ரத்த உறைவைத் தடுக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12%லிருந்து, 5% ஆகவும், கொவிட் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படும் இதர மருந்துகளுக்கு 5% ஜிஎஸ்டி வரியை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

•     மருத்துவப் பிராணவாயு, பிராணவாயு செறிவூட்டிகள் (தனிநபர் இறக்குமதி உட்பட), செயற்கை சுவாசக் கருவிகள், செயற்கை சுவாசக் கவசங்கள், மூக்கில் பொருத்தப்படும் புனல்வகைக் கருவிகள், கொவிட் பரிசோதனை உபகரணங்கள், குறிப்பிடப்பட்ட அழற்சியைக் கண்டறியும் சோதனைக் கருவிகள், பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் (தனிநபர் இறக்குமதி உட்பட) முதலியவற்றிற்கு இருந்துவந்த 12% ஜிஎஸ்டி வரியை, 5 % ஆகக் குறைக்கக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.

•     கை சுத்திகரிப்பான், வெப்பநிலை பரிசோதிக்கும் கருவி, ஈமச்சடங்கிற்குத் தேவைப்படும் எரிவாயு/ மின்னணு/ இதர எரியூட்டிகள் (அவற்றின் நிறுவுதல் உட்பட) போன்றவற்றிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 18% ஜிஎஸ்டி வரியை 5% ஆகக் குறைக்கவும், அவசர சிகிச்சை ஊர்திகளுக்கு இருந்துவந்த 28% வரியை 12%ஆகக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726525

----



(Release ID: 1726595) Visitor Counter : 239