சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அமைச்சர்கள் குழுவின் 28-வது கூட்டத்திற்கு டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமை வகித்தார்

Posted On: 07 JUN 2021 4:03PM by PIB Chennai

கொவிட்-19-க்கான உயர்மட்ட அமைச்சர்கள் குழுவின் 28-வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் இன்று தலைமை வகித்தார்.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் (தனிப் பொறுப்பு) மற்றும் விமான போக்குவரத்து (தனிப் பொறுப்பு) அமைச்சர் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் புரி, உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கொவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த டாக்டர் ஹர்ஷ் வர்தன், “குணமடைதல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து 93.94% எனும் அளவில் இன்று இருக்கிறது. கடந்த 61 நாட்களில் குறைந்த அளவிலான புதிய பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகி இருக்கின்றன. இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 25 நாட்களாக குணமடைதல் விகிதம் புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளது,” என்றார்.

தடுப்பு மருந்து மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் குறித்து பேசிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், “23,27,86,482 தடுப்பூசிகளை இன்று காலை வரை நாட்டு மக்களுக்கு நாம் வழங்கி இருக்கிறோம். 18-44 வயது பிரிவினரில் 2,86,18,514 பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. 1.4 கோடிக்கும் அதிகமான தடுப்பு மருந்துகள் மாநிலங்களிடம் இன்னும் இருப்பு உள்ளன,” என்றார்.

இரண்டாம் அலையின் பாதிப்பு குறைந்து வருவதாக கூறிய அவர், மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற அதிக பாதிப்புகளைக் கண்ட மாநிலங்களில் கூட தொற்றின் பரவல் குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்துள்ளது என்றார். மே 5 அன்று 14.7 சதவீதமாக இருந்த தொற்று வளர்ச்சி விகிதம், 3.48 சதவீதமாக இன்று குறைந்துள்ளது.

இன்சாகோக் ஆய்வகங்கள் கொரோனாவின் புதிய வடிவங்களை ஆய்வு செய்து வருவதாகவும், 30,000-க்கும் அதிகமான மாதிரிகளை 10 தேசிய ஆய்வகங்கள் வரிசைப்படுத்தியுள்ளதாகவும், மேலும் 18 ஆய்வகங்கள் குழுவுக்குள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

28,252 கருப்பு பூஞ்சை பாதிப்புகள் 28 மாநிலங்களில் இது வரை கண்டறியப்பட்டுள்ளன என்று கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், இவற்றை எதிர்கொள்வதில் மத்திய மற்றும் மாநில அரசுக்களுக்கிடையேயான ஒத்துழைப்பை பாரட்டினார்.

கூட்டத்தில் பேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே, கொவிட்-19-- எதிர்கொள்ள தடுப்பு மருந்தே முக்கிய ஆயுதம் என்பதால், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்களிடம் உள்ள தயக்கத்தை போக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

தடுப்பு மருந்து வழங்கல் நிலவரம், குழந்தைகளுக்கான கொவிட் பராமரிப்பு மற்றும் மூன்றாம் அலையை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால் விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725061

------


(Release ID: 1725141) Visitor Counter : 264