ரெயில்வே அமைச்சகம்
உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக இந்திய ரயில்வே உருவெடுத்துக் கொண்டிருக்கிறது
Posted On:
04 JUN 2021 3:59PM by PIB Chennai
உலகத்தின் மிகப்பெரிய பசுமை ரயில்வேயாக திகழ்வதற்கான முயற்சிகளை மும்முரமாக எடுத்து வரும் இந்திய ரயில்வே, கரியமில வாயுவை முற்றிலும் வெளியிடாத அமைப்பாக 2030-ம் ஆண்டுக்குள் உருவெடுக்க இருக்கிறது.
மிகப்பெரிய மின்மயமாக்கல், தண்ணீர் மற்றும் காகித சேமிப்பு, ரயில் பாதைகளில் அடிபடாமல் விலங்குகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்து வருகிறது. சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த மற்றும் மாசை குறைக்கும் ரயில்வே மின்மயமாக்கல், 2014-ம் ஆண்டில் இருந்து பத்து மடங்கு அதிகரித்துள்ளது.
சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும் போது சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததாக இருக்கும் ரயில் போக்குவரத்தின் மூலம் பெருந்தொற்றின் போது உணவு தானியங்கள் மற்றும் ஆக்சிஜன் நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டது.
இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளுக்காக ஜூலை 2016-ல் இந்திய ரயில்வே மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்புக்கு (சிஐஐ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 39 பணிமனைகள், 7 உற்பத்தி மையங்கள், 8 லோகோ ஷெட்கள் மற்றும் ஒரு சேமிப்பு கிடங்கு ஆகியவற்றுக்கு ‘கிரீன்கோ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள் இவற்றில் அடங்கும்.
19 ரயில் நிலையங்களுக்கும் பசுமை சான்றிதழ் கிடைத்துள்ளது. 3 பிளாட்டினம், 6 தங்கம் மற்றும் 6 வெள்ளி மதிப்பீடுகள் இவற்றில் அடங்கும். 27 ரயில்வே கட்டிடங்கள், அலுவலகங்கள், வளாகங்கள் மற்றும் இதர இடங்களுக்கும் பசுமை சான்றிதழ் கிடைத்துள்ளது. 15 பிளாட்டினம், 9 தங்கம் மற்றும் 2 வெள்ளி மதிப்பீடுகள் இவற்றில் அடங்கும்.
இதைத் தவிர, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை கடந்த 2 வருடங்களில் 600 ரயில் நிலையங்கள் பெற்றுள்ளன. மொத்தம் 718 ரயில் நிலையங்கள் ஐஎஸ்ஓ: 14001 சான்றிதழை பெற்றுள்ளன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அறிக்கை குறித்த கையேட்டின் இணைப்புக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1724414 இணைய தளத்தைப் பார்க்கவும்.
---
(Release ID: 1724508)
Visitor Counter : 282