அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொரோனா தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted On: 02 JUN 2021 11:10AM by PIB Chennai

நாட்டில் உள்ள தகுதியான அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நோக்கில், மத்திய அரசின் உதவியுடன் தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு, தற்சார்பு இந்தியா 3.0 கொவிட் சுரக்‌ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை உதவி அளிக்கிறது. 

மும்பையில் உள்ள ஹப்கைன் பயோபார்மாட்டிக்கல் கார்பரேஷன் லிமிடெட், ஐதராபாத்தில் உள்ள இந்தியன் இமுனோலாஜிக்கல்ஸ் லிமிடெட், உத்தரப் பிரதேசம் புலந்சாகரில் உள்ள பாரத் இமுனோலாஜிக்கல்ஸ் மற்றும் பயோலாஜிக்கல்ஸ் லிமிடெட் ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தயாராகி வருகின்றன.

ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டு கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி செய்ய மகாராஷ்டிரா அரசின் ஹப்பைன் பயோபார்மாநிறுவனம் தயாராகி வருகிறது. இந்த உற்பத்தி இந்த நிறுவனத்தின் பரேல் காம்ப்ளக்ஸில் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஹப்பைன் பயோபார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்தீப் ரதோட் கூறுகையில், ‘‘ ஆண்டுக்கு 22.8 கோடி டோஸ் கோவாக்சின் உற்பத்தி செய்ய எங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக எங்கள் நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.65 கோடி மானியமும், மகாராஷ்டிரா அரசு ரூ.94 கோடி மானியமும் அளித்துள்ளன’’ என்றார்.

உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறுகையில், ‘‘ பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது, நாட்டின் மிகப் பெரிய தடுப்பூசி நடவடிக்கைக்கு உதவும்’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723608

*****************



(Release ID: 1723751) Visitor Counter : 248