ரெயில்வே அமைச்சகம்
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: ஒரேநாளில் மிக அதிக அளவாக 1142 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம்
Posted On:
24 MAY 2021 2:13PM by PIB Chennai
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 997 டேங்கர்களில் 16023 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.
இதுவரை 247 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 50 டேங்கர்களில் 920 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 12 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
ஒரு நாளில் மிக அதிகமாக 1142 மெட்ரிக் டன் பிராணவாயு நேற்று கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பாக கடந்த 20-ஆம் தேதி 1118 மெட்ரிக் டன் பிராண வாயு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விநியோகம் செய்யப்பட்டது.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில், தமிழகமும், கர்நாடகாவும் தலா 1000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவைப் பெற்றுள்ளன.
கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி, மகாராஷ்டிராவில் இருந்து 126 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் முதன்முதலாகத் தனது பயணத்தைத் துவக்கிய ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரு மாத காலத்தில் 14 மாநிலங்களுக்கு 16000 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய 14 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.
இதுவரை தமிழகத்திற்கு 1024 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3649 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 633 மெட்ரிக் டன், தில்லிக்கு 4600 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 1759 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 1063 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 730 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 246 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 976 மெட்ரிக் டன், அசாமிற்கு 80 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1721237
*****************
(Release ID: 1721262)
Visitor Counter : 338