பிரதமர் அலுவலகம்

வாரணாசி மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்


மனநிறைவு கூடாது என எச்சரித்த பிரதமர் பனாரஸ் மற்றும் பூர்வாஞ்சல் கிராம பகுதிகளில் கவனம் செலுத்தும்படி சுகாதார பணியாளர்களுக்கு வலியுறுத்தல்

சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் வீட்டுக்கு சென்று மருந்து விநியோகிக்கும் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு

நோயாளிகளின் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளிப்பது சுகாதார அமைப்பின் சுமையை குறைக்கும்: பிரதமர்

Posted On: 21 MAY 2021 2:16PM by PIB Chennai

வாரணாசியில் உள்ள மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.  இந்த கலந்துரையாடலின் போதுசுகாதார கட்டமைப்பை அதிகரித்தது, தேவையான மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற முக்கிய சாதனங்கள் போதிய அளவில் கிடைப்பதை உறுதி செய்தது ஆகியவற்றில் , பிரதமரின் தொடர்ச்சியான மற்றும் செயல்திறன் மிக்க தலைமை உதவியதற்காக  அவருக்கு வாரணாசி மருத்துவர்களும், அதிகாரிகளும் நன்றி தெரிவித்தனர்.  கடந்த ஒரு மாதத்தில் கொவிட் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தடுப்பூசி நிலவரம், வாரணாசியில் எதிர்கால சவால்களை  எதிர்கொள்ள  தயாராவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்தும் பிரதமரிடம்  தெரிவிக்கப்பட்டது. 

மியூகோமிகோசிஸ் அச்சுறுத்தல் குறித்து விழிப்புடன் இருப்பதாகவும், இந்த நோயை சமாளிக்க ஏற்கனவே நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பிரதமரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், கிராமங்களில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் இணைய கருத்தரங்குகளை நடத்தும்படி அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு பிரதமர் அறுவுறுத்தினார். 

வாரணாசியில் தடுப்பூசிகள் வீணாவதை  தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம்  பிரதமர் கேட்டுக் கொண்டார்.  காசியைச் சேர்ந்த  மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் இதர முன்களப் பணியாளர்களின் பணியை பிரதமர் பாராட்டினார். குடும்ப உறுப்பினர்களை இழந்த அனைவருக்கும் பிரதமர் தனது இரங்கலை தெரிவித்தார்.  பனாரஸ் பகுதியில் குறுகிய காலத்தில் ஆக்ஸிஜன் மற்றும் ஐசியு படுக்கை வசதிகள் எண்ணிக்கையை விரைவாக அதிகரிக்கச் செய்ததையும், பண்டிட் ராஜன் மிஸ்ரா கொவிட் மருத்துவமனையில் அனைத்து வசதிகள்  செய்யப்பட்டதையும் அவர் பாராட்டினார். 

வாரணாசியில் ஒருங்கிணைந்த கொவிட் கட்டுப்பாட்டு மையம் நன்றாக செயல்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், வாரணாசியின் செயல்பாடு உலகத்துக்கு உத்வேகம் அளிப்பதாக  கூறினார்.

கொவிட் தொற்றை மிகப் பெரிய அளவில் கட்டுப்படுத்திய மருத்துவ குழுவினரின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.   இந்த பணியில் மனநிறைவு கூடாது எனவும், பனாரஸ் மற்றும் பூர்வாஞ்சல் பகுதியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கவனம் செலுத்தி நீண்ட போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தினார். 

கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள், கொவிட் போராட்டத்தில் அதிகம் உதவியுள்ளன என அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை வசதிகள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கியது, ஜன் தன் வங்கி கணக்குகள், உடல் தகுதி இந்தியா பிரச்சாரம், யோகா  மற்றும் ஆயுஷ் பற்றிய விழிப்புணர்வு ஆகியவை கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் பலத்தை அதிகரித்துள்ளது என பிரதமர் கூறினார்.  

கொவிட் மேலாண்மையில் புதிய மந்திரத்தையும் பிரதமர் வழங்கினார்: ‘‘எங்கெல்லாம் தொற்று உள்ளதோ அங்கெல்லாம் சிகிச்சை அவசியம்’’ என அவர் தெரிவித்தார்.   நோயாளிகளின் வீட்டுக்கு சென்று சிகிச்சை அளிப்பது, சுகாதார அமைப்பின் சுமையை குறைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

சிறிய கட்டுப்பாட்டு மண்டலங்கள், வீட்டுக்கு சென்று மருந்துகள் விநியோகிப்பது போன்ற முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.  இந்த பிரச்சாரத்தை, ஊரக பகுதிகளில் விரிவாக மேற்கொள்ளும்படி அவர் சுகாதார பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.  மருத்துவர்கள், பரிசோதனைக் கூடங்கள் மற்றும் இ-மார்க்கெட்டிங் நிறுவனங்கள் ஒன்றிணைந்து தொலைதூர மருத்துவ வசதியை காசி கவச்என்ற பெயரில் அளிப்பது மிக புதுமையான நடவடிக்கையாக உள்ளது என அவர் கூறினார்.

கிராமங்களில் கொவிட்டுக்கு எதிரான பேராட்டத்தில் ஆஷா பணியாளர்கள் மற்றும் ஏஎன்எம் சகோதரிகள் முக்கியப் பங்காற்றுவதை வலியுறுத்திய பிரதமர் அவர்களின் ஆற்றல் மற்றும் அனுபவத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி சுகாதாரத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த இரண்டாவது அலையில், முன்களப் பணியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பாக சேவையாற்ற முடிகிறது.  இதற்கு காரணம் அவர்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதுதான் என அவர் மேலும் கூறினார்.  அனைவரும், அவர்களுக்கான வாய்ப்பு வரும்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேச அரசின் தீவிர முயற்சிகள் காரணமாக, பூர்வாஞ்சல் பகுதியில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டதையும் பிரதமர் குறிப்பிட்டார். அதே உணர்வு மற்றும் விழிப்புடன், தற்போதும் பணியாற்ற வேண்டும் என அவர் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை வலியுறுத்தினார்.

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், கருப்பு பூஞ்சை தொற்று நோய் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.  இதை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம் எனவும் அவர் கூறினார்.

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், வாரணாசியின் மக்கள் பிரதிநிதிகள் வழங்கிய தலைமையையும் பிரதமர் பாராட்டினார்.  மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்தாலும், மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  மக்கள் யாருக்காவது, எந்த குறை ஏற்பட்டாலும்அதில் கவனம் செலுத்த வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு  என அவர் மேலும் தெரிவித்தார். 

நகரை சுத்தமாக பராமரிப்பதில், வாரணாசி மக்கள் தங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவதையும் பிரதமர் பாராட்டினார்.

*****************


(Release ID: 1720634) Visitor Counter : 272