உள்துறை அமைச்சகம்

'டவ்-தே' புயலுக்கு பின் எடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை செயலாளர் தலைமையிலான தேசிய நெருக்கடி நிர்வாகக் குழு ஆய்வு செய்ததுx

Posted On: 20 MAY 2021 4:22PM by PIB Chennai

'டவ்-தே' புயலுக்கு பின் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் முகமைகளால் எடுக்கப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை செயலாளர் திரு ராஜிவ் கவுபா தலைமையிலான தேசிய நெருக்கடி நிர்வாக குழு இன்று ஆய்வு செய்தது.

கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களின் ஆலோசகர்கள், உள்கட்டமைப்பு, பயிர்கள் மற்றும் உயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து குழுவிடம் எடுத்துரைத்ததோடு, தொலைத்தொடர்பு, மின்சாரம், சாலைகள், தண்ணீர் விநியோகம் மற்றும் இதர வசதிகளை மீண்டும் வழங்குவதற்காக தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினர்.

இந்திய வானிலைத் துறை சரியான நேரத்தில் துல்லியமாக வழங்கிய முன்னெச்சரிக்கை காரணமாகவும், அனைத்து மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச முகமைகள் எடுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் மருத்துவமனைகள் மற்றும் கொவிட் பராமரிப்பு மையங்களின் செயல்பாடுகள் எந்தவித பாதிப்பும் இன்றி தொடர்ந்து நடைபெற்றதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

காணாமல் போனவர்களை மீட்பதற்காக இந்திய கடற்படை, கடலோர காவல்படை, ஓஎன்ஜிசி மற்றும் இதர முகமைகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த திரு ராஜிவ் கவுபா, தொலைத்தொடர்பு, மின்சாரம், சாலைகள், நீர் விநியோகம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை மறு சீரமைக்கும் பணிகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்குவதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் உடன் மத்திய அமைச்சகங்கள் மற்றும் முகமைகள் தொடர்ந்து இணைந்து பணியாற்றும்.

*****************


(Release ID: 1720333) Visitor Counter : 231