சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 மருத்துவ மேலாண்மை பற்றிய சமீபத்திய தகவல்கள்

Posted On: 08 MAY 2021 2:31PM by PIB Chennai

இன்னும் அதிக அளவில் நோயாளிகளின் நலன் சார்ந்து இருக்கும் வகையில் மருத்துவமனைகளில் கொவிட் நோயாளிகளை அனுமதிப்பதற்கான தேசிய கொள்கை திருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த அறிவுறுத்தலில், பல்வேறு பிரிவுகளின் கீழ் வரும் கொவிட் மையங்களில் கொவிட் நோயாளிகளை அனுமதிப்பதற்கான தேசிய கொள்கை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் திருத்தப்பட்டுள்ளது.

கொவிட் நோயாளிகளுக்கு முறையான, சிறப்பான மற்றும் விரிவான சிகிச்சை வழங்குவதை இந்த நோயாளி நலன் சார்ந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தலின்படி, மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் இருக்கும் மருத்துவமனைகள் (தனியார் மருத்துவமனைகள் உட்பட) கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்:

கொவிட் மருத்துவ மையத்தில் ஒருவரை சேர்ப்பதற்கு கொவிட் பாதிப்பு  உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனை முடிவு கட்டாயமில்லை. சந்தேகத்துக்கிடமான நோயாளியை அதற்குரிய வார்டில் அனுமதிக்கலாம்.

எக்காரணத்தை முன்னிட்டும் எந்த நோயாளிக்கும் மருத்துவ சேவைகள் மறுக்கப்படக் கூடாது. நோயாளி வேறொரு நகரத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஆக்சிஜன் அல்லது அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட வேண்டும்.

மருத்துவமனை அமைந்திருக்கும் நகரத்தில் வசிப்பதற்கான அடையாள சான்று இல்லை என்ற காரணத்தால் எந்த நோயாளிக்கும் அனுமதி மறுக்கப்படக் கூடாது

தேவையின் அடிப்படையில் நோயாளி மருத்துவமனையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். மருத்துவமனை சிகிச்சை தேவை இல்லாத நபர்கள் படுக்கைகளை ஆக்கிரமித்து இருப்பதை அனுமதிக்க கூடாது.

மேலும், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்புவது என்பது https://www.mohfw.gov.in/pdf/ReviseddischargePolicyforCOVID19.pdf என்ற முகவரியில் இருக்கும் திருத்தப்பட்ட கொள்கையின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும்.

மேற்கண்ட அறிவுறுத்தல்களை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளை மூன்று நாட்களுக்குள் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் வெளியிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx? PRID=1717009

**(Release ID: 1717044) Visitor Counter : 23