பாதுகாப்பு அமைச்சகம்

டிஆர்டிஓ-வின் 2-டிஜி: கொவிட்-19 தொற்றுக்கு எதிரான மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

Posted On: 08 MAY 2021 1:42PM by PIB Chennai

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வின் ஆய்வகமான அணு மருந்தியல் மற்றும் அது சார்ந்த அறிவியல் நிறுவனம், ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரிஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள 2-டிஜி (2-DG) என்ற தடுப்புமருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மே 1-ஆம் தேதி அனுமதி அளித்தது.

பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று டிஆர்டிஓ நிறுவனம் இந்த மருந்தைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பெருந்தொற்றின் முதல் அலையின் போது நடத்தப்பட்ட சோதனையில் இந்த மருந்து கொவிட் தொற்றுக்கு எதிராகவும், தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற பல்வேறு கட்ட சோதனைகளில், 2-டிஜி மருந்தில் உள்ள மூலக்கூறுகளால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் விரைவாக குணமடையவும், பிராணவாயுவின் தேவையைக் குறைக்கவும் முடியும் என்பது  தெரியவந்துள்ளது.

மிதமானது முதல் தீவிரமானது வரை தொற்று உள்ள நோயாளிகளுக்கு பொதுவான மருந்துகளுடன் 2-டிஜி மருந்தையும் சேர்த்து வழங்குவதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

கொவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் ஏராளமான நோயாளிகளுக்கு பிராணவாயுவும்மருத்துவமனையில் அனுமதியும் தேவைப்படும் சூழலில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கையைக் குறைத்து, ஏராளமான உயிர்களைப் பாதுகாக்கும் வரப்பிரசாதமாக 2-டிஜி மருந்து அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717007

----


(Release ID: 1717042)