விண்வெளித்துறை

நாட்டின் கொவிட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக விண்வெளி துறை முன்வந்துள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


தமிழகம் மற்றும் கேரளாவுக்கு திரவ ஆக்சிஜன் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது

Posted On: 06 MAY 2021 6:02PM by PIB Chennai

கொவிட் தொடர்பான ஆதரவை, குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு திரவ ஆக்சிஜனை, வழங்க விண்வெளி துறை முன்வந்துள்ளது என்று வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

இணையவழியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டமொன்றில் பேசிய இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் டாக்டர் கே சிவன், தினமும் 9.5 டன் ஆக்சிஜன் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், ஆந்திரா மற்றும் சண்டிகரின் ஆக்சிஜன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வாரத்தின் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கி, 87 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்த இஸ்ரோ புரொபொல்ஷன் வளாகம், ஐபிஆர்சி, அதை தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 12 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் ஆந்திரப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டது. கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களையும் துறை வழங்கி வருவதாக அவர் கூறினார்.

1.65 லட்சம் லிட்டர்கள் திறனுடைய 2 திரவ நைட்ரஜன் டேங்கர்களை, திரவ ஆக்சிஜன் கலன்களாக அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையம் வெற்றிகரமாக மாற்றியதாக டாக்டர் ஜிதேந்திர சிங்கிற்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு முகக் கவசங்கள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்வெளி துறை செய்து வரும் கொவிட் தொடர்பான பல்வேறு பணிகள் குறித்து விளக்கப்பட்டன.

மேலும், ஆளில்லாத ககன்யான் விண்கலம் உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களை இந்த வருடம் டிசம்பரில் ஏவுவதற்கான பணிகள் நடந்து வருவதாக விண்வெளி துறையின் மூத்த அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

பெங்களூரு, ஷில்லாங் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள கொவிட் பராமரிப்பு மையங்களைத் தவிர, இன்னும் அதிக வசதிகளை நிறுவுமாறு துறை அதிகாரிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

*****************



(Release ID: 1716593) Visitor Counter : 223