கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

துறைமுகங்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் கொவிட் மேலாண்மைக்கான தயார்நிலை குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு

Posted On: 29 APR 2021 4:35PM by PIB Chennai

கொவிட்-19 இரண்டாம் அலையை முன்னிட்டு, துறைமுகங்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் தயார் நிலை குறித்து மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி போக்குவரத்து இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு கூட்டம் நடத்தினார். 

இந்த கூட்டத்தில், மருத்துவமனைகளின் பிரத்தியேக கொவிட் சிகிச்சை மேலாண்மை நிலவரத்தை  அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்களும் எடுத்துக் கூறினா்.

தற்போது, 12 முக்கிய துறைமுகங்கள்நாடு முழுவதும் கொவிட் சிகிச்சைக்காக 9 பிரத்தியேக மருத்துவமனைகளை செயல்படுத்துகின்றன. விசாகப்பட்டினம், கொல்கத்தா, மும்பை, மர்முகோவா, சென்னை, மும்பை  துறைமுக கழகங்கள், ஜவஹர்லால் நேரு, தீன்தயாள்  துறைமுக கழகங்கள்  இந்த மருத்துவமனைகளை இயக்குகின்றன.

இங்கு கொவிட் நோயாளிகளுக்காக 422 தனிமை படுக்கைகள், 305 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 28 ஐசியு படுக்கை வசதிகள்  வென்டிலேட்டர் வசதியுடன் உள்ளன.

பெருநிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்)  நிதிகளை பயன்படுத்தி, வரும் நாட்களில் மருத்துவமனைகளின் திறன்களையும், வசதிகளையும் அதிகரித்து, அவற்றை செயல்படுத்த வேண்டும் என அனைத்து துறைமுக கழகங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.  முக்கிய துறைமுகங்களில், மருத்துவ ஆக்ஸிஜன் தொடர்பான பொருட்களை  விரைவில் திறமையாக கையாள வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். 

இதற்கு முன் இல்லாத சூழலை நாடு சந்தித்திருப்பதாகவும், இதற்கு நமது துறைமுக மருத்துவமனை திறனை தீவிரமாக பயன்படுத்தி உதவ வேண்டும் என திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டார்.  இந்தத் தொற்றை எதிர்த்து போராட, அனைத்து முக்கிய துறைமுகங்களும், ஒருங்கிணைந்த முயற்சியை முடிந்தளவு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

*****************


(Release ID: 1714906) Visitor Counter : 216