பிரதமர் அலுவலகம்

ரஷிய அதிபர் திரு புடினுடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்

Posted On: 28 APR 2021 7:51PM by PIB Chennai

ரஷிய அதிபர் மேன்மைமிகு விளாடிமிர் புடினுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று நிலைமை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்திய அரசு மற்றும் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்த ரஷ்ய அதிபர், தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ரஷியா செய்யும் என்று கூறினார். அதிபர் திரு புடினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் திரு மோடி, இந்தியாவுக்கான ரஷியாவின் சிறப்பான ஆதரவு இரு நாடுகளின் உறவுக்கான அடையாளம் என்றார்.

சர்வதேச பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு அதிபர் புடின் பாராட்டு தெரிவித்தார். இந்தியா, ரஷியா மற்றும் உலக நாடுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரஷிய தடுப்பு மருந்து பயன்படுத்தப்படும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறப்பான மற்றும் பாரம்பரியம் மிக்க உறவின் பின்னணியில் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு  இரு தலைவர்களும் முக்கியத்துவம் அளித்து பேசினார்கள்.

இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு ரஷியா அளித்த ஆதரவுக்கும், நான்கு ககன்யான் ஆராய்ச்சியாளர்களுக்கு ரஷியா பயிற்சி அளித்ததற்கும் பிரதமர் திரு மோடி பாராட்டு தெரிவித்தார்.

ஹைட்ரஜன் பொருளாதாரம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு தலைவர்களும் பேசினார்கள்.

இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் அளவில் புதிய 2+2 பேச்சுவார்த்தையை தொடர இரு தலைவர்களும் முடிவெடுத்தனர்.

2019 செப்டம்பரில் விலாடிவோஸ்டாக்கில் நடைபெற்ற தங்களது உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை இரு தலைவர்களும் நினைவுக் கூர்ந்தனர்.

தங்களது தனிப்பட்ட மற்றும் நம்பிக்கை மிகுந்த உரையாடலுக்கான வாய்ப்பை வழங்கும், இந்தியாவில் இந்த வருடம் நடக்கவுள்ள இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அதிபர் புடின் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தை தாம் மிகவும் எதிர்பார்ப்பதாக பிரதமர் திரு மோடி கூறினார்.

2021-ல் இந்தியாவின் தலைமையில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டுக்கு ரஷியாவின் முழு ஆதரவை அதிபர் புடின் உறுதிப்படுத்தினார். இருதரப்பு மற்றும் சர்வதேச விஷயங்களில் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் இரு தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

*****************


(Release ID: 1714733) Visitor Counter : 226