பிரதமர் அலுவலகம்

பிரதமரின் நல நிதியிலிருந்து 1 லட்சம் சிறிய ரக ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படவுள்ளன


டிஆர்டிஓ உருவாக்கிய தொழில்நுட்பம் அடிப்படையில் மேலும் 500 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க பிரதமரின் நல நிதியின் கீழ் அனுமதி

ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள், தேவைப்படும் பகுதிகளில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கும்

Posted On: 28 APR 2021 4:32PM by PIB Chennai

பிரதமரின் நல நிதியிலிருந்து, பிற இடங்களுக்கு எடுத்தும் செல்லும் வகையிலான, 1 லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

கொவிட் மேலாண்மைக்கு, திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இந்த ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விரைவில் கொள்முதல் செய்து கொவிட் பாதிப்பு அதிகம் உள்ள  மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.

பிரதமரின் நல நிதியிலிருந்து  713 பிஎஸ்ஏ ( அழுத்தம் மற்றும் உறிஞ்சும் தொழில்நுட்பத்துடன் கூடிய) ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்க ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 500 பிஎஸ்ஏ ஆலைகள் பிரதமரின் நல நிதியின் கீழ் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் 2ம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் திரவ மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கும்.  உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு டிஆர்டிஓ மற்றும் சிஎஸ்ஐஆரின் தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்வதன் மூலம், இந்த 500 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படும்.

பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் நிறுவுவது மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்குவது ஆகியவை, தேவைப்படும் பகுதிகளில் ஆக்ஸிஜன் விநியோகத்தை வெகுவாக அதிகரிக்கும். இதன் மூலம் உற்பத்தி ஆலைகளில் இருந்து மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படும் தற்போதைய சவால்களுக்கு தீர்வு காணப்படும். 

*****************



(Release ID: 1714666) Visitor Counter : 306