பிரதமர் அலுவலகம்

சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்து விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை தொடங்கி வைத்தார் பிரதமர்


4.09 லட்சம் உரிமையாளர்களுக்கு மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டன

தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021-யும் பிரதமர் வழங்கினார்

கொரோனா மேலாண்மையில் பஞ்சாயத்துகளின் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினர்

இந்த சவாலான தருணத்தில் எந்த ஒரு குடும்பமும் பசியால் வாடக் கூடாது என்பது நமது பொறுப்பு: பிரதமர்

பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும், இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 26 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவிடுகிறது: பிரதமர்

மத்திய அரசு, தனது அனைத்து கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளில் கிராமங்களை மையப்படுத்துகிறது: பிரதமர்

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பஞ்சாயத்துகளுக்கு ரூ. 2.25 லட்சம் கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது. வெளிப்படைத்தன்மை மீதான எதிர்பார்ப்பிற்கு இது வழிவகுக்கிறது: பிரதமர்

Posted On: 24 APR 2021 1:54PM by PIB Chennai

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சுவாமித்வா திட்டத்தின்கீழ் சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய மின்னணு அட்டைகளின் விநியோகத்தை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு 4.09 லட்சம் சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும்  நாடு முழுவதும் சுவாமித்வா திட்டத்தின் தொடக்கமாகவும் இது அமைந்தது. மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்களும், பஞ்சாயத்துராஜ் அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

ஊரக இந்தியாவின் மறு வளர்ச்சிக்கு உறுதிமொழி ஏற்குமாறு நம்மை நாமே மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ளும் நாளாக பஞ்சாயத்துராஜ் தினம் அமைவதாக பிரதமர் கூறினார். நமது கிராம பஞ்சாயத்துகளின் ஈடு இணையற்ற பணியை அங்கீகரித்து, பாராட்டுவதற்கான தினமாக, இது அமைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவுக்கு எதிரான மேலாண்மையிலும், கிராமங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தலைமைத்துவம் அளித்த பஞ்சாயத்துக்களின் பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். ஊரக இந்தியாவிலிருந்து பெருந்தொற்றை வெளியேற்றுவதன் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகள் முழுவதுமாக கடைப்பிடிக்கப்படுவதை பஞ்சாயத்துகள் உறுதி செய்யுமாறும் திரு மோடி கேட்டுக் கொண்டார்.

இந்த முறை தடுப்பூசி என்னும் கேடயம் நமக்கு இருப்பதாக அவர் நினைவூட்டினார். கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதையும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த சவாலான தருணத்தில் எந்த ஒரு குடும்பமும் பசியால் வாடக் கூடாது என்பதை உறுதி செய்வது  நமது பொறுப்பு என்று பிரதமர் வலியுறுத்தினார். பிரதமர் ஏழைகள் நல்வாழ்வு அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஒவ்வொரு தனிநபருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் 80 கோடி பயனாளிகள் பயனடைவதுடன், இத்திட்டத்திற்காக, மத்திய அரசு, 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்து வருகிறது.

சுவாமித்வா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாநிலங்களில், ஒரு வருடத்திற்குள் இத்திட்டத்தால் ஏற்பட்ட தாக்கத்தை பிரதமர் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின் கீழ் கிராம சொத்துக்கள் முழுவதும் ட்ரோன் கருவிகளின் மூலம் ஆய்வு செய்யப்படுவதுடன் உரிமையாளர்களுக்கு சொத்துக்களின் விபரங்கள் அடங்கிய அட்டை விநியோகிக்கப்படுகிறது. இன்று, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் 4.09 லட்சம் மக்களுக்கு இதுபோன்ற மின்னணு சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சொத்து ஆவணங்கள், உரிமை நிச்சயமின்மையை தகர்த்து, சொத்து பூசல்களைக் குறைத்து, ஊழலில் இருந்து ஏழைகளை பாதுகாப்பதால் இந்தத் திட்டம், கிராமங்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.‌

கடன்களின் வாய்ப்பையும் இது சுலபமாக்குகிறது. “ஒருவகையில் இந்தத் திட்டம் ஏழை மக்களின் பாதுகாப்பையும், கிராமங்களின் திட்டமிட்ட வளர்ச்சியையும் அவற்றின் பொருளாதாரத்தையும் உறுதி செய்யும்”,   என்று பிரதமர் கூறினார்

இந்திய ஆய்வறிக்கையுடன் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தேவையான மாநிலச் சட்டங்களை மாற்றியமைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சொத்து அட்டையைப் பயன்படுத்தி கடன்களை எளிதில் வழங்கும் வழிமுறைகளை வங்கிகள் ஏற்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வளர்ச்சியும், கலாச்சார தலைமைத்துவமும் நமது கிராமங்களில் எப்போதுமே இருந்து வருவதாக பிரதமர் கூறினார்.‌ இந்தக் காரணத்தினால்தான் மத்திய அரசு தனது அனைத்து கொள்கைகள் மற்றும் முன் முயற்சிகளில் கிராமங்களை மையப்படுத்துகிறது. “நவீன இந்தியாவின் கிராமங்கள், திறமை வாய்ந்ததாகவும், தற்சார்புடனும் இருக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்”, என்று பிரதமர் தெரிவித்தார்.

பஞ்சாயத்துக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பிரதமர் எடுத்துரைத்தார். பஞ்சாயத்துகளுக்கு புதிய உரிமைகள் கிடைக்கின்றன ஃபைபர் இணையதளம் வாயிலாக அவை இணைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் வழியாக குடிநீரை வழங்கும் ஜல் ஜீவன் இயக்கத்தில் பஞ்சாயத்துக்களின் பங்கு மிகவும் முக்கியம்.

அதேபோல் ஒவ்வொரு ஏழை குடிமகனுக்கும் நிரந்தர கிராமம் அல்லது கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள் பஞ்சாயத்துகளின் வாயிலாக நிறைவேற்றப்படுகின்றன. பஞ்சாயத்துக்களின் வளர்ந்து வரும் நிதி தன்னாட்சி பற்றியும் பிரதமர் பேசினார். முன்பு எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாயத்துகளுக்கு ரூ. 2.25 லட்சம் கோடியை இந்திய அரசு ஒதுக்கியுள்ளதாக திரு மோடி கூறினார்.

இதன்மூலம் வெளிப்படைத் தன்மை மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கும். ‘மின்னணு கிராம ஸ்வராஜ்' திட்டத்தின் மூலம் இணையதளம் வாயிலாக பணம் செலுத்தும் வழிமுறைகளை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இனிபணம் செலுத்துதல் பொது நிதி மேலாண்மை கட்டமைப்பின் வாயிலாக நிகழும்.‌ ஏராளமான பஞ்சாயத்துகள் பொது நிதி மேலாண்மை கட்டமைப்பில் தங்களை ஏற்கனவே இணைத்துக் கொண்டிருப்பதாகவும், எஞ்சியுள்ளவர்களும் விரைவில் இணையுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

75-வது சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைக்க உள்ளதைக் குறிப்பிட்ட பிரதமர், பல்வேறு சவால்களுக்கு இடையிலும் வளர்ச்சியை நோக்கி முன்னேறுமாறு பஞ்சாயத்துகளைக் கேட்டுக்கொண்டார். தங்களது கிராமங்களுக்கென இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை நிறைவேற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

சுவாமித்வா திட்டம் குறித்து:

கிராமங்களின் ஆய்வு மற்றும்  மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு கிராமப்பகுதிகளை விவரணையாக்கம் எனும் சுவாமித்வா திட்டம், சமூக பொருளாதார அளவில் அதிகாரமளிக்கப்பட்ட, தற்சார்பு மிக்க கிராமப்புற இந்தியாவை ஊக்குவிப்பதற்காக 2020 ஏப்ரல் 24 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

விவரணையாக்கம் மற்றும் ஆய்வுக்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி ஊரக இந்தியாவை மாற்றியமைக்கும் திறன் இந்த திட்டத்திற்கு உள்ளது.

கடன்கள் மற்றும் இதர நிதி பலன்களை பெறுவதற்காக சொத்தை நிதி வளமாக கிராமத்தில் உள்ளவர்கள் பயன்படுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள 6.62 லட்சம் கிராமங்களில் 2021 முதல் 2025 வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இதன் ஆரம்பக் கட்டம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் 2020-2021-ல் செயல்படுத்தப்பட்டது.

------



(Release ID: 1713787) Visitor Counter : 276