சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1-ம் தேதியில் இருந்து கொவிட்-19 தடுப்பு மருந்து பெறலாம்: அரசு அறிவிப்பு

Posted On: 19 APR 2021 7:12PM by PIB Chennai

2021 மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்புமருந்து திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இதன் படி, கொவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர் ஆவர்.

பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறுகிய காலத்தில் அதிக அளவிலான இந்தியர்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதிசெய்ய ஒரு வருடத்திற்கும் மேலாக அரசு கடுமையாக பணியாற்றி வருகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உலகின் மாபெரும் தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் தடுப்பு மருந்துகளின் விலை நிர்ணயம், கொள்முதல், தகுதி மற்றும் வழங்குதல் ஆகியவை நெகிழ்தன்மை மிக்கதாக மாற்றப்பட்டுள்ளன.

உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப செயலாற்றும் வசதி அனைத்து பங்குதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

உற்பத்தியை பெருக்குவதற்கும், புதிய தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதற்கும் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

 

தங்களது விநியோகத்தில் 50 சதவீதம் வரை மாநில அரசுகளுக்கும், வெளி சந்தைக்கும்முன்னரே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்க தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

50 சதவீத தடுப்பு மருந்துகளை இந்திய அரசுக்கு அவர்கள் வழங்க வேண்டும்.

தடுப்பு மருந்துகளை நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் எந்த பிரிவினருக்கும் தடுப்பூசி வழங்கவும் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை எப்போதும் போல் தொடர்ந்து நடைபெற்று, ஏற்கனவே குறிப்பிட்டவாறு சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட முன்னுரிமை பிரிவினருக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும்.

*****************(Release ID: 1712734) Visitor Counter : 402