சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் பணி தீவிரம்

Posted On: 13 APR 2021 1:11PM by PIB Chennai

இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முடுக்கி விடுவது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் தலைமையில் 2021 ஏப்ரல் 11 அன்று நடைபெற்ற கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவின் 23-வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு இந்த நிபுணர் குழு பரிந்துரைத்தது.

மேலும், இந்தத் தடுப்பூசிகளை நாட்டில் முழுவீச்சில் பயன்படுத்துவதற்கு முன்னர் தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்படலாம்.

தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொவிட்- 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் விரிவான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது. இந்த வகையில் தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில் கடந்த 2020 மே மாதம் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதேபோல் தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

இதுபோன்ற நடவடிக்கைகளினால், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளை உள்நாட்டு பயன்பாட்டிற்கு அனுமதித்த நாடுகளுள் இந்தியா முதலிடம் பெற்றது.

தற்போது பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டிற்கு தேசிய கட்டுப்பாட்டாளர் (இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர்) அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1711381

*****************


(Release ID: 1711452) Visitor Counter : 334