பிரதமர் அலுவலகம்

குரு தேக் பகதூர் அவர்களின் 400 வது பிறந்த நாளையொட்டி (பிரகாஷ் பூரப்) உயர்மட்டக் குழுவில் பிரதமர் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு

Posted On: 08 APR 2021 3:16PM by PIB Chennai

வணக்கம்!

கமிட்டியின் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களே! குரு தேக் பகதூர் அவர்களின் 400 வது (பிரகாஷ் பூரப்) பிறந்த நாள்  நிகழ்வு ஒரு ஆன்மீக அனுபவமும். தேசிய கடமையுமாகும். இது தொடர்பாக நாம் ஏதாவது பங்களிக்க முடியும் என்றால், அதற்கு நம் அனைவருக்கும் குருவின் அருள் இருப்பதே காரணம். இந்த முயற்சிகளை மேற்கொள்ளும்போது நாட்டின் அனைத்து குடிமக்களையும் நாம் நம்முடன் அழைத்துச் செல்கிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தேசிய அமலாக்கக் குழுவின் தலைவராக இருப்பதால், உள்துறை அமைச்சர், வந்துள்ள பரிந்துரைகளையும் குழுவின் கருத்துக்களையும் எங்களுக்கு அளித்துள்ளார். முழு ஆண்டுக்கான செயல் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதில் இன்னும் பல புதிய யோசனைகளுக்கும் இடமிருக்கிறது. உறுப்பினர்களிடமிருந்து மதிப்புமிக்க, அடிப்படை யோசனைகளும் பெறப்பட்டுள்ளன. இது ஒரு சிறந்த வாய்ப்பு. நமது நாட்டின் அடிப்படை எண்ணங்களை சர்வதேச அளவில் மக்களிடம் எடுத்துச் செல்ல நாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்காத ஏராளமான உறுப்பினர்கள் தங்கள் ஆலோசனைகளை எழுத்துபூர்வமாக அனுப்புவார்கள் என்று நான் நம்புகிறேன், இதனால் இந்த நிகழ்வை மேலும் சிறப்பான செயல் திட்டத்துடன் நடத்த முடியும்.

நண்பர்களே,

குரு தேக் பகதூர் அவர்களின் பாதிப்பு இல்லாமல் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் எந்த ஒரு காலத்தையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஒன்பதாவது குருவாக, நாம் அனைவரும் அவரிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம். நீங்கள் அனைவரும் அவரது வாழ்க்கையின் கட்டங்களை நன்கு அறிந்தவர்கள், இது போன்றே, நாட்டின் புதிய தலைமுறையினரும் அவரை அறிந்துகொள்வதும் புரிந்து கொள்வதும் மிக முக்கியம்.

நண்பர்களே,

குரு நானக் தேவ் அவர்கள் முதல் குரு தேக் பகதூர் அவர்கள்இறுதியாக குரு கோபிந்த் சிங் அவர்கள் வரையிலும் நமது சீக்கிய குரு பாரம்பரியம், வாழ்க்கையின் முழுமையான தத்துவமாக இருந்து வருகிறது. குரு நானக் தேவ் அவர்களின் 550 வது பிறந்த நாள், குரு தேக் பகதூர் அவர்களின் 400 வது பிறந்த நாள், குரு கோபிந்த் சிங் அவர்களின் 350 வது பிறந்த நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது நமது அரசாங்கத்தின் பாக்கியமாகும். நமது குருக்களின் வாழ்க்கையைப் பின்பற்றுவதன் மூலம் முழு உலகமும் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் வாழ்க்கையில் மிக உயரிய தியாகமும் சகிப்புத்தன்மையும் இருந்தது. அவர்களின் வாழ்க்கையில் அறிவின் ஒளியும்; ஆன்மீக நிலைப்பாடும் இருந்தது.

நண்பர்களே,

குரு தேக் பகதூர் அவர்கள் கூறியதாவது: "सुखु दुखु दोनो सम करि जानै अउरु i.e. i.e." அதாவது, இன்பத்திலும், துன்பத்திலும், கவுரவிக்கப்படுகையிலும், அவமானப்படுத்தப்பட்டாலும் நம் வாழ்க்கையை நாம் ஒரே மாதிரியாக வாழ வேண்டும். வாழ்க்கையின் நோக்கங்களையும் அவர் காண்பித்துள்ளார். நாட்டுக்கும், வாழ்க்கைக்கும் சேவை செய்யும் பாதையை அவர் நமக்குக் காட்டியுள்ளார். சமத்துவம், நல்லிணக்கம், துறவு என்ற மந்திரத்தை அவர் நமக்கு வழங்கியுள்ளார். இவற்றை நாமும் கடைப்பிடித்து வாழ்வதும்அவற்றை மக்களிடையே பரப்புவதும் நம் அனைவரின் கடமையாகும்.

நண்பர்களே,

இங்கு விவாதிக்கப்பட்டபடி, 400 வது பிரகாஷ் பூரப் ஆண்டு முழுவதும் நாட்டில் நடத்தப்பட வேண்டும், உலகில் அதிகபட்ச எண்ணிக்கையிலான மக்களைச் சென்றடையவும் நாம் முயல வேண்டும். சீக்கிய யாத்திரை மையங்களும், சீக்கிய பாரம்பரியத்துடன் தொடர்புடைய அனைத்து புனிதத்தலங்களும் இந்த செயல்பாடுகளுக்கு அதிக ஆற்றலை வழங்கும். குரு தேக் பகதூர் ஜியின்ஷாபாத்ஸ்’, அவரதுசங்கீதங்கள்’, அவருடன் தொடர்புடைய இலக்கியங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவை மக்களை உற்சாகப்படுத்தும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இச்செய்திகளை உலகம் முழுவதும் உள்ள புதிய தலைமுறையினர் எளிதாக அணுக வகை செய்ய முடியும். இந்த எல்லா முயற்சிகளிலும் நம்மால் முடிந்தவரை பலரை இணைக்க வேண்டும்.

நண்பர்களே,

குரு தேக் பகதூர் அவர்களின் வாழ்க்கையையும், போதனைகளையும் முழு குரு பாரம்பரியத்தையும் உலகுக்கு எடுத்துச் செல்ல, நாம் இந்த நிகழ்வைப் பயன்படுத்த வேண்டும். சீக்கிய சமூகமும் நமது குருக்களைப் பின்பற்றும் லட்சக்கணக்கானவர்களும் தங்கள் குருக்களின் அடிச்சுவடுகளை எவ்வாறு பின்பற்றுகிறார்கள்; சீக்கியர்கள் எவ்வாறு சிறந்த சமூக சேவை செய்கிறார்கள்; நமது குருத்வாராக்கள் மனிதகுலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவை பற்றிய செய்திகளை முழு உலகிற்கும் எடுத்துச் செல்ல முடிந்தால், நாம் மனிதகுலத்தை பெரிதும் ஊக்குவிக்க முடியும்.

 

இவற்றை ஆராய்ச்சி செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த முயற்சிகள் வருங்கால சந்ததியினருக்கும் வழிகாட்டும். இது குரு தேக் பகதூர் அவர்கள் உட்பட அனைத்து குருக்களின் பாதங்களுக்கும் நாம் செலுத்தும் காணிக்கையாக, ஒரு வகையில் உண்மையான சேவையாகவும் இருக்கும். இந்த முக்கியமான நேரத்தில், நமது நாடு விடுதலையடைந்து 75 ஆண்டுகளான அமிர்த மஹோத்ஸவையும் பவழ விழாவையும் நாடு கொண்டாடுகிறது. குருக்களின் ஆசியுடன் ஒவ்வொரு நிகழ்விலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.

உங்களது உன்னதமான பரிந்துரைகள் அனைத்திற்கும் நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், வரவிருக்கும் காலங்களில் உங்களது ஒத்துழைப்பு இந்த மாபெரும் பாரம்பரியத்தை நமது எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்களிப்பாக இருக்கும். இந்தப் புனித விழாவில் குருக்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் நமக்குக் கிடைத்திருப்பது நமக்குப் பெருமை சேர்க்கும்.

நல்வாழ்த்துகள், அனைவருக்கும் மிக்க நன்றி!

***


(Release ID: 1710654)