பிரதமர் அலுவலகம்

பருவநிலைக்கான அமெரிக்க சிறப்பு தூதர் மேதகு திரு ஜான் கெர்ரி பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு

Posted On: 07 APR 2021 8:34PM by PIB Chennai

பருவநிலைக்கான அமெரிக்க சிறப்பு தூதர் மேதகு திரு ஜான் கெர்ரி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

திரு கெர்ரி, அமெரிக்க அதிபர் பைடனின் வாழ்த்துகளை, பிரதமருக்கு தெரிவித்தார். ‘க்வாட்எனப்படும் நாற்கர கூட்டமைப்பின் தலைவர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அதிபர் பைடனுடனான  தமது கலந்துரையாடல்களை நினைவுகூர்ந்த பிரதமர், தமது நல்வாழ்த்துகளை அதிபர் திரு பைடனுக்கும், துணை அதிபர் திருமதி கமலா ஹாரிஸுக்கும் தெரிவிக்குமாறு திரு கெர்ரியைக் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் தாம் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான விவாதங்கள் பற்றி திரு கெர்ரி பிரதமரிடம் எடுத்துரைத்தார். இந்தியாவின் லட்சியமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் உள்ளிட்ட  பருவநிலைக்கான திட்டங்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார். 2021 ஏப்ரல் 22-23 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பருவநிலை தொடர்பான தலைவர்களின் உச்சி மாநாடு குறித்தும் அவர் பிரதமரிடம் விளக்கினார்.

 

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தனது பங்களிப்பை நிறைவேற்றுவதில் இந்தியா உறுதிபூண்டிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதுபோன்ற அர்ப்பணிப்புடன் சரியான பாதையில் செல்லும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று கூறினார். பருவநிலை திட்டங்களுக்குத் தேவையான  பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நிதி உதவிகளை இந்தியா பெறுவதற்கு அமெரிக்கா உதவும் என்று திரு கெர்ரி தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிதி மற்றும் பசுமை தொழில்நுட்பங்களின் விரைவான பயன்பாடு உள்ளிட்டவற்றில் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான ஒத்துழைப்பு, இதர நாடுகளில் நேர்மறையான செயல் விளக்க தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பிரதமர் கூறினார்.

*****


(Release ID: 1710356) Visitor Counter : 238