பிரதமர் அலுவலகம்
இந்திய-பின்லாந்து காணொலி உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை
Posted On:
16 MAR 2021 7:09PM by PIB Chennai
மேதகு பின்லாந்து பிரதமர் அவர்களே,
வணக்கம்!
நீங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு மிக்க நன்றி.
மேதகு பின்லாந்து பிரதமர் அவர்களே,
பின்லாந்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா சார்பில் எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது தலைமையின் கீழ், பின்லாந்து, கொவிட் தொற்றை திறம்பட கையாண்டது. அதற்காக, உங்களுக்கு வாழ்த்துகள்.
மேதகு பின்லாந்து பிரதமர் அவர்களே,
இந்தத் தொற்று காலத்தில், இந்தியா உள்நாட்டு தேவைகளையும், உலகத் தேவைகளையும் கவனித்தது. கடந்த ஆண்டு, நாங்கள் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் இதர பொருட்களை அனுப்பினோம்.
சமீபத்தில், இந்தியாவில் தயாரான 58 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை, நாங்கள் 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பினோம். ஒட்டு மொத்த மனித குலத்துக்கும், எங்களால் முடிந்த அளவு தொடர்ந்து உதவி செய்வோம் என்ற உறுதியை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.
மேதகு பின்லாந்து பிரதமர் அவர்களே,
பின்லாந்தும், இந்தியாவும், விதிமுறைகள் அடிப்படையிலான, வெளிப்படையான, மனிதநேயம் மற்றும் உலகளாவிய ஜனநாயக ஒழுங்கின் மீது நம்பிக்கை வைத்துள்ளன.
தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு, சுத்தமான எரிசக்தி, சுற்றுச்சூழல், கல்வி போன்றவற்றில் இருநாடுகள் இடையே வலுவான ஒத்துழைப்பு உள்ளது. இவை அனைத்தும், கொவிட்டுக்கு பிந்தைய பொருளாதார மீட்பு நடவடிக்கைக்கு மிக முக்கியமானது.
சுத்தமான எரிசக்தி துறையில் பின்லாந்து, உலகின் முன்னணி நாடாக உள்ளது மற்றும் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாகவும் உள்ளது. பருவநிலை குறித்து நீங்கள் கவலை தெரிவிக்கும்போதெல்லாம், ‘‘நாம் இயற்கைக்கு அதிகளவில் அநீதி இழைத்துவிட்டோம். அதனால் இயற்கை கோபமாக உள்ளது. அதனால், இன்று நாம் முகமூடி மூலம் முகத்தை மறைக்கும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளோம்’’ என நான், நமது நண்பர்களிடம் சில சமயங்களில் நகைச்சுவையாக கூறுவேன்.
இந்தியாவில் பருவநிலை நோக்கங்களை அடைய நாங்கள் லட்சிய இலக்குகளை வைத்துள்ளோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், 2030ம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்க சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் பேரிடர் மீட்பு கட்டமைப்பு கூட்டணி ஆகியவற்றை உருவாக்கும் முயற்சிகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
இவற்றில் பின்லாந்தும் இணைய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். இந்த சர்வதேச அமைப்புகள், பின்லாந்தின் நிபுணத்துவத்தால் அதிக பயனடையும்.
மேதகு பின்லாந்து பிரதமர் அவர்களே,
புதிய தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் பின்லாந்து முன்னணி நாடாக உள்ளது. இந்த அனைத்து துறைகளிலும், ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஆற்றல் எங்களிடம் உள்ளது. தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ஐசிடி), மொபைல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வி ஆகிய துறைகளில் கூட்டாக செயல்படுவது பற்றி புதிய அறிவிப்பை நாம் இன்று வெளியிட்டது மகிழ்ச்சி.
உயர்நிலை பேச்சுவார்த்தையையும், நமது கல்வி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இன்றைய உச்சி மாநாடு இந்தியா-பின்லாந்து உறவுகளின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும்.
மேதகு பின்லாந்து பிரதமர் அவர்களே,
இன்று நமது முதல் கூட்டம். நாம் நேரில் சந்தித்து பேசவும் விரும்புகிறேன். ஆனால், தொழில்நுட்ப உதவி மூலம், கடந்த ஓராண்டாக, நாம் காணொலி மூலம் கூட்டம் நடத்துவதை பழக்கமாக்கி கொண்டோம். போர்ச்சுக்கலில் நடைபெறும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு மற்றும் டென்மார்க்கில் நடைபெறும் இந்தியா - நார்டிக் உச்சிமாநாடு ஆகியவற்றில் நாம் சந்திக்கும் வாய்ப்பை விரைவில் பெறுவோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் நாம் பல விஷயங்களை ஆலோசிப்போம்.
மிக்க நன்றி.
------
(Release ID: 1705484)
Visitor Counter : 208
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam