பிரதமர் அலுவலகம்
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு பதிப்பை பிரதமர் வெளியிட்டார்
கீதை நம்மை சிந்திக்க வைக்கிறது, கேள்வி எழுப்பத் தூண்டுகிறது, விவாதங்களை ஊக்குவிப்பதோடு, நமது மனதை திறக்கச் செய்கிறது: பிரதமர்
Posted On:
11 MAR 2021 11:25AM by PIB Chennai
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு புத்தக பதிப்பை காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார்.
சுவாமி சித்பவானந்தாவின் பகவத் கீதையின் மின்னணு புத்தக பதிப்பை வெளியிட்டு பேசுகையில், கீதையின் உன்னத சிந்தனைகளை பெருவாரியான இளைஞர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலான இந்த மின்னணு பதிப்பின் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.
பாரம்பரியமும், தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். எப்போதும் நிலைத்து நிற்கும் கீதைக்கும், ஒளிமயமான தமிழ் கலாச்சாரத்திற்கும் இடையேயான இணைப்பை இந்த மின்னணு புத்தகம் மேலும் ஆழப்படுத்தும் என்றார் அவர். உலகெங்கும் உள்ள புலம்பெயர் தமிழ் மக்கள் எளிதாக வாசிப்பதற்கு இந்த மின்னணு புத்தகம் வழிவகை செய்கிறது. ஏராளமான துறைகளில் புலம்பெயர் தமிழர்கள் புதிய உச்சங்களை அடைந்து வரும்போதும், எங்கு சென்றாலும் தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பை விட்டுக்கொடுக்காத அவர்களது பண்பை அவர் பாராட்டினார்.
சுவாமி சித்பவானந்தாவிற்கு மரியாதை செலுத்திய பிரதமர், சுவாமி சித்பவானந்தாவின் மனம், உடல், இதயம் மற்றும் ஆன்மா, இந்தியாவின் மீளாக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். சென்னையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரைகள், மக்களுக்காக சேவை புரியவும், நாட்டு நலனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவும் சுவாமி சித்பவானந்தாவை ஊக்குவித்ததாக அவர் குறிப்பிட்டார். சுவாமி சித்பவானந்தா, ஒருபுறம் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்ட நிலையில், மறுபுறம் அவரது உன்னத செயல்களால் உலகிற்கு ஊக்கமளித்தார் என்று அவர் கூறினார். சமூக சேவை, சுகாதாரம், கல்வி, சுவாமி சித்பவானந்தாவின் உன்னத படைப்புகளை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற சிறந்த பணிகளில் ஈடுபட்டுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்திற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
கீதையின் அழகு அதன் ஆழம், பன்முகத்தன்மை மற்றும் நெகிழ்வுத் தன்மையில் வெளிப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். தாம் தடுமாறும் போது மடியில் வைத்துக் கொள்ளும் ஓர் அன்னையாக கீதையை ஆச்சாரியா வினோபா பாவே வர்ணித்ததாக அவர் கூறினார். மகாத்மா காந்தி, திரு லோக்மான்ய திலகர், மகாகவி சுப்பிரமணிய பாரதி போன்ற மாபெரும் தலைவர்கள் கீதையால் ஈர்க்கப்பட்டனர். கீதை நம்மை சிந்திக்கவைக்கிறது, கேள்வி எழுப்பத் தூண்டுகிறது, விவாதங்களை ஊக்குவிப்பதோடு, நமது மனதை திறக்கச் செய்கிறது என்று அவர் தெரிவித்தார். கீதையால் ஈர்க்கப்பட்ட எவரும் இயற்கையின் மீது எப்போதும் இரக்கம் கொண்டவராகவும், ஜனநாயக மனப்போக்குடனும் திகழ்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
பூசல்கள் மற்றும் மனச்சோர்வின் போது ஸ்ரீமத் பகவத் கீதை பிறந்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், அதே போன்ற பூசல்கள் மற்றும் சவால்களைத் தற்போது மனித சமூகம் கடந்து வருவதாகத் தெரிவித்தார். பகவத் கீதை, மனச்சோர்வு முதல் வெற்றி வரையிலான பயணத்தின் எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு பொக்கிஷம் என்று அவர் மேலும் கூறினார். ஸ்ரீமத் பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள பாதை, பெருந்தொற்றுக்கு எதிரான கடுமையான போராட்டத்தில் உலக நாடுகள் ஈடுபட்டு, பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை எதிர்கொண்டு வரும் தற்போதைய காலத்திற்கு ஏதுவாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். மனித சமூகம் தற்போது சந்தித்து வரும் சவால்களில் மீண்டும் வெற்றியடைந்து சரியான பாதையில் செல்வதற்கான ஆற்றலை ஸ்ரீமத் பகவத் கீதை வழங்கக் கூடும் என்று அவர் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் கீதையின் முக்கியத்துவம் குறித்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் இதய நோய் சம்பந்தமான சஞ்சிகையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையை அவர் மேற்கோள் காட்டினார்.
செயலின்மையைவிட செயல் மேம்பட்டது என்பது ஸ்ரீமத் பகவத் கீதையின் முக்கிய செய்தி என்று பிரதமர் கூறினார். அதேபோல நமக்கு மட்டுமல்லாமல் மனித சமூகத்திற்கே வளம் மற்றும் மாண்புகளை உருவாக்குவது தான் தற்சார்பு இந்தியாவின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டார். தற்சார்பு இந்தியா, உலகிற்கு நன்மை பயக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம். கீதையின் கருத்துக்களின் அடிப்படையில் மனித சமூகத்திற்கு உதவும் வகையில் கொவிட் தொற்றை தடுப்பதற்காக நமது விஞ்ஞானிகள் குறுகிய காலத்தில் எவ்வாறு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தனர் என்பதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஸ்ரீமத் பகவத் கீதையின் போதனைகள் நடைமுறைக்கு ஏற்ற வகையிலும், தொடர்புபடுத்தக் கூடியதுமாக இருப்பதால், பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் இதில் கவனம் செலுத்துமாறு பிரதமர் வலியுறுத்தினார். பரபரப்பான வாழ்க்கையின் இடையில் கீதை அமைதியை வழங்கும் என்று அவர் கூறினார். இது, தோல்வி பற்றிய அச்சத்திலிருந்து நமது மனதை இலகுவாக்குவதுடன், செயல்களில் நமது கவனத்தைத் திருப்பும் என்று அவர் தெரிவித்தார். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் நேர்மறையான சிந்தனைகள் வளர்வதற்கான அம்சங்களை வழங்குவதாக பிரதமர் கூறினார்.
*****************
(Release ID: 1704145)
Visitor Counter : 296
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam