பிரதமர் அலுவலகம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் உரை

வேளாண் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறையின் பங்களிப்பு அதிகளவில் தேவை என வலியுறுத்தினார்
அரசின் தொலை நோக்கில், சிறு விவசாயிகளின் மேம்பாடு முக்கியமானதாக உள்ளது: பிரதமர்
பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலக சந்தைக்கு நமது நாட்டின் வேளாண்துறையை நாம் விரிவு படுத்த வேண்டும்: பிரதமர்

Posted On: 01 MAR 2021 12:51PM by PIB Chennai

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்  தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். 

இந்த இணைய கருத்தரங்கில், வேளாண்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய வேளாண்துறை அமைச்சரும் இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசின் தொலை நோக்கில் சிறு விவசாயிகள் முக்கியமான இடத்தில் இருப்பதை எடுத்துரைத்தார்.  சிறு விவசாயிகளை மேம்படுத்துவது, பல பிரச்னைகளில் இருந்து  விவசாயத்துறை விடுபட மிகவும் உதவும் என்றார்.

 இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளத்துறைக்கு முன்னுரிமையுடன், வேளாண் கடன் இலக்கை ரூ.16,50,000 கோடியாக உயர்த்தியது,  ஊரக கட்டமைப்பு நிதியை ரூ.40,000 கோடியாக உயர்த்தியது, சொட்டு நீர் பாசனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியது, அழிந்துபோகும் நிலையில் இருந்த தயாரிப்புகளுக்கு ஆபரேஷன் பசுமை திட்டத்தை விரிவுபடுத்தியது, மேலும் 1000 மண்டிகளை இ-நாம்-உடன் இணைத்தது போன்ற  விவசாயத்துறையில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய விஷயங்களை அவர் சுட்டிக் காட்டினார்.

அறுவடைக்கு பிந்தைய உணவு பதப்படுத்துதல் புரட்சி, இதுவரை இல்லாத அளவுக்கு வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்கு மத்தியில்,  21ம் நூற்றாண்டில் மதிப்பை கூட்டுதல்  ஆகிய இந்தியாவின் தேவைகளை அவர் வலியுறுத்தினார்.  இது போன்ற பணிகள் 2 அல்லது 3 சதாப்தங்களுக்கு முன்பே செய்யப்பட்டிருந்தால், நாட்டுக்கு நன்றாக இருந்திருக்கும் என அவர் கருத்து தெரிவித்தார்.

உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மீன்கள் போன்ற விவசாயம் தொடர்பான ஒவ்வொரு துறையிலும், பதப்படுத்துதலை மேம்படுத்த வேண்டும் என பிரதமர்  வலுவாக வலியுறுத்தினார்.  இதற்கு, விவசாயிகளுக்கு, அவர்களின் கிராமங்களுக்கு அருகிலேயே சேமிப்பு கிடங்கு வசதிகள் இருக்க வேண்டியது அவசியம்  என அவர் கூறினார். 

விவசாய உற்பத்தியை வயல்களில் இருந்து, பதப்படுத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் முறையில் முன்னேற்றம் தேவை என கூறிய பிரதமர்,  இந்த பதப்படுத்துதல் மையங்களை விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் வழிநடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.  நாட்டின் விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருளை விற்பதற்கான வாய்ப்புகளை விரிவாக்க வேண்டிய தேவையுள்ளது என அவர் வலியுறுத்தினார்.

 ‘‘பதப்படுத்தப்பட்ட உணவுக்கான உலக சந்தைக்கு நமது நாட்டின் விவசாயத்துறையை நாம் விரிவாக்க வேண்டும். கிராமங்களுக்கு அருகிலேயே வேளாண் தொழிற்சாலை தொகுப்புகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க வேண்டும்’’ என பிரதமர் கூறினார்.  இதில் ஆர்கானிக் தொகுப்புகள் மற்றும் ஏற்றுமதி தொகுப்புகள் முக்கிய பங்காற்றும் என அவர் கூறினார். 

வேளாண் பொருட்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கும், தொழிற்சாலை தயாரிப்புகள் நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும் கொண்டுச்  செல்லும் சூழலுக்கு நாம் செல்ல வேண்டும் என  அவர்  கூறினார்.  ஒரு மாவட்டத்துக்கு ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் நமது தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்லும் வழிகளை ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மீன் பிடி தொழில் மற்றும் ஏற்றுமதியில் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும்,  பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்கு குறைவாக உள்ளது என பிரதமர்  வருத்தத்துடன் கூறினார்.  இந்த சூழலை மாற்ற, தயார் நிலை உணவுகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், பழங்கள், கடல் உணவுப் பொருட்கள் , பால் பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்க, சீர்திருத்தங்களுடன் ரூ.11,000 கோடி மதிப்பிலான உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 ‘ஆபரேசன் கிரீன்ஸ்’ திட்டத்தின் கீழ், காய்கறிகள் மற்றும் பழங்கள் போக்குவரத்துக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.  கடந்த 6 மாதங்களில் மட்டும், சுமார் 350 கிசான் ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் 1,00,000 மெட்ரிக் டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டன என அவர் கூறினார்.

ஒட்டு மொத்த நாட்டின் விவசாய உற்பத்தி பொருட்களுக்கும் குளிர்பதன கிடங்காக இந்த கிசான் ரயில் செயல்படுகிறது. 

தற்சார்பு சார்பு இந்தியா பிரச்சாரத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை உருவாக்க வலியுறுத்தப்படுகிறது என பிரதமர் கூறினார்.

பிரதமரின்  சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான சிறிய உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு உதவிகள் அளிக்கப்படுகின்றன. டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள்  மற்றும் இதர விவசாய இயந்திரங்களை  சிறு விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு வாடகைக்கு விடுவது ஆகியவற்றுடன், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சிறு விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

விவசாய பொருட்களை மலிவான விலையில் சந்தைக்கு கொண்டு செல்ல ஒப்பந்த லாரிகளை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் கூறினார்.  மண்வள அட்டை வழங்கும் வசதியை நீட்டிக்க வேண்டிய தேவையை அவர் வலியுறுத்தினார். 

மண்வளம்  பற்றிய விவசாயிகளின் விழிப்புணர்வை அதிகரிப்பது, விவசாய பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கும் என அவர் கூறினார்.

வேளாண்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில், தனியார் துறையின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். 

கோதுமை மற்றும் அரிசி மட்டும் பயிரிடாமல், இதர பொருட்கள் உற்பத்தி செய்யும் வாய்ப்பையும் நாம் வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். 

ஆர்கானிக் உணவு முதல், காய்கறிகள் வரை பல விவசாய உற்பத்தி பொருட்களை அவர் குறிப்பிட்டார்.  கடற்பாசி மற்றும் தேன் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  இது விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும் என அவர் கூறினார்.  தனியார் துறை பங்களிப்பு அதிகரிப்பது, விவசாயிகளின் நம்பிக்கையை ஊக்குவிக்கும் என அவர் கூறினார்.

ஒப்பந்த விவசாய முறை,  நாட்டில் நீண்டகாலமாக இருப்பதாக பிரதமர் கூறினார். இந்த ஒப்பந்த முறை விவசாயம், வர்த்தக நோக்கத்துடன் மட்டும் இல்லாமல், நிலத்துக்கான நமது பொறுப்பையும் பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் விவசாயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும், நீர்ப்பாசனம் முதல் விதைத்தல், அறுவடை மற்றும் விற்பனை வரை விரிவான தொழில்நுட்ப தீர்வுகளை காண வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.  வேளாண் துறை தொடர்பான தொடக்க நிறுவனங்களை நாம் ஊக்குவித்து இளைஞர்களை நாம் இணைக்க வேண்டும் என அவர் கூறினார். 

கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் கடன் அட்டை திட்டம்,  கால் நடை வளர்ப்போர், மீனவர்கள் என  கொஞ்சம், கொஞ்சமாக விரிவுபடுத்தப்படுவதாகவும், கடந்த ஓராண்டில் 1.80 கோடி விவசாயிகளுக்கு, கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  

கடந்த 6-7 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒப்பிடும்போது, கடன் வசதிகள் இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகியுள்ளன.  நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 1000 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுடன் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கூட்டுறவுகளை வலுப்படுத்துகிறது என அவர் கூறினார்.

*******

 


(Release ID: 1701722) Visitor Counter : 269