குடியரசுத் தலைவர் செயலகம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அகமதாபாத்தில் தொடங்கி வைத்தார் குடியரசுத் தலைவர்

प्रविष्टि तिथि: 24 FEB 2021 2:58PM by PIB Chennai

1.32 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்குவது நமக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

அகமதாபாத்தில் நிறுவப்பட்டுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தை இன்று (பிப்ரவரி 24, 2021) தொடங்கிவைத்து, சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகின் மிகப் பெரிய மைதானமாக  மட்டுமல்லாமல், உலகத்தரம் வாய்ந்த பல்வேறு விளையாட்டு சார்ந்த அம்சங்களும் இந்த மைதானத்தில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பசுமை கட்டிடங்களுக்கான சான்றிதழைப் பெற்று சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த மைதானம் விளங்குவதாக அவர் தெரிவித்தார். உலக அரங்கில் வலுவான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ள புதிய இந்தியாவின் லட்சியங்களையும், திறமைகளையும் இந்த மைதானம் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

சிறிய கிராமங்கள், நகர்ப்புறங்களைச் சேர்ந்த பல்வேறு இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கடின உழைப்பினால்  விளையாட்டு திறமைகளை வளர்த்து வருவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்

மற்ற விளையாட்டுகளிலும் சர்வதேச அளவில் போட்டியிடுவதற்கான திறமையையும் நமது இளைஞர்கள் பெற்றுள்ள போதும், கிரிக்கெட்டிற்கு வழங்கப்படுவதைப் போல இதர விளையாட்டுகளுக்கும் உலகத் தரம்வாய்ந்த உள்கட்டமைப்பை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விளையாட்டுகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் அதேவேளையில், திறமை வாய்ந்த வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம் என்றும் திரு. ராம் நாத் கோவிந்த் கூறினார்.

 வசதிகளை அமைத்துத் தருவதும், அந்த வசதிகள் முறையாக வீரர்களைச் சென்று அடைவதும் நமது விளையாட்டு வீரர்களின் முழுமையான வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

விளையாட்டுத் துறையில் புதிய கலாச்சாரத்தை உருவாக்க மத்திய அரசு பணியாற்றி வருவதாகவும், கேலோ இந்தியா, ஃபிட் இந்தியா போன்ற பிரச்சாரங்கள் ஆரோக்கியமான உடல்நிலை மற்றும் விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700417


(रिलीज़ आईडी: 1700499) आगंतुक पटल : 182
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , Marathi , Assamese , English , हिन्दी , Bengali , Manipuri , Gujarati , Odia , Malayalam