பிரதமர் அலுவலகம்

நிதி ஆயோக் 6வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பிரதமரின் தொடக்க உரை

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் ஒத்துழைப்பு முக்கியம்: பிரதமர்

பி.எல்.ஐ. திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி அதிகபட்ச முதலீடுகளை ஈர்க்க மாநிலங்களுக்கு வலியுறுத்தல்

Posted On: 20 FEB 2021 11:57AM by PIB Chennai

நிதி ஆயோக் 6வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், கூட்டாட்சி தத்துவம் தான் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக உள்ளது என்று கூறினார். இதை மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்கி, கூட்டாட்சி தத்துவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் இன்றைய கூட்டம் நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், ஒட்டுமொத்த நாடே வெற்றி பெற முடிந்தது என்று அவர் கூறினார். நாட்டில் உயர் முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் எவை என்பதை தேர்வு செய்து, இன்றைய கூட்டத்தில் விவாதப் பொருள்களாக சேர்க்கப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.

ஏழைகள் எல்லோருக்கும் தரமான வீடுகள் கிடைக்கச் செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. 2014-ல் இருந்து 2 கோடியே 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். ஜல் ஜீவன் திட்டம் தொடங்கிய 18 மாதங்களில்  3.5 லட்சம் ஊரகப் பகுதி வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலமாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர். கிராமங்களில் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தும் பாரத்நெட் திட்டம், பெரிய மாற்றத்துக்கான வழிமுறையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற திட்டங்களில் மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது, பணிகள் வேகமாக நடைபெற்று, பயன்கள் அதிகரிப்பதுடன், கடைசிநிலை மக்கள் வரை இதன் பயன்களைப் பெற முடிகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் பட்ஜெட்டுக்கு கிடைத்துள்ள ஆக்கபூர்வ வரவேற்பு, நாட்டின் மனநிலையின் மூலம் தெரிய வருகிறது என்றார் அவர். நாட்டு மக்கள் வேகமாக முன்னேற விரும்புகிறார்கள், காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க, தனியார் துறையினர் உற்சாகத்துடன் முன் வருகின்றனர். அரசாங்கத்தின் பங்கிற்கு, அந்த உற்சாகத்துக்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டியுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தில் தனியார் துறையினருக்கு ஊக்கம் கொடுத்து, தேவையான வாய்ப்புகளை அளிப்பது நமது கடமையாக உள்ளது என்று பிரதமர் கூறினார். நமது நாட்டுக்கான பொருட்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமின்றி, உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், உலக தரத்தில் முன்னணி வகிக்கும் வகையில் தயாராவதற்கு, தற்சார்பு இந்தியாவை ஊக்குவிப்பதற்கான வழிமுறையாக தற்சார்பு இந்தியா திட்டம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா போன்ற இளம்வயதினர் அதிகம் வாழும் நாட்டின் உயர் விருப்பங்களை மனதில் கொண்டு, நவீன கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார். புதுமை சிந்தனை படைப்புகளை ஊக்குவிக்க வேண்டும், கல்வி மற்றும் தொழில் திறன்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கச் செய்ய, தொழில்நுட்ப வசதிகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நமது தொழில்கள், எம்.எஸ்.எம்..கள், ஸ்டார்ட் அப்களின் செயல்பாட்டை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர்  கூறினார். நாட்டில் பல நூறு மாவட்டங்களுக்கு ஏற்ற உற்பத்திப் பொருட்களின் பட்டியலை அந்தப் பகுதியின் சூழலுக்கு ஏற்ப ஆய்வு செய்து முடிவு செய்ததால், அத் தொழில்கள் வளரவும், மாநிலங்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி உருவாகவும் வாய்ப்பு கிடைத்தது என்று அவர் கூறினார். இதை ஊராட்சி ஒன்றிய அளவில் அமல் செய்து, மாநிலங்களில் உள்ள ஆதார வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, மாநிலங்களில் இருந்து ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் யோசனை தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் நல்ல ஒருங்கிணைப்பு மற்றும் கொள்கை கட்டமைப்புகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

            பல்வேறு துறைகளில் மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு (பி.எல்..) திட்டம் மாநிலத்தில் உற்பத்தித் துறையில் பெரிய வளர்ச்சியைக் காண்பதற்கு உதவும் அருமையான திட்டமாக உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இத் திட்டத்தை மாநிலங்கள் முழு அளவில் பயன்படுத்திக் கொண்டு அதிகபட்ச முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றும், கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டிருப்பதன் பயன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த பட்ஜெட்டில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் பொருளாதாரம் பல நிலைகளில் உயர்வதற்கு இது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவித்தார். மாநிலங்கள் தற்சார்பு நிலை பெற்று, தங்கள் பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு உந்துதல் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 15வது நிதிக் குழுவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொருளாதார ஆதாரங்கள் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று பிரதமர் அறிவித்தார். உள்ளாட்சி நிர்வாக சீர்திருத்தங்களில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுடன், மக்களின் ஈடுபாடும் அவசியமானது என்றார் அவர்.

            உணவு எண்ணெய் இறக்குமதிக்கு நாம் செலவிடும் சுமார் ரூ.65 ஆயிரம் கோடி, நமது விவசாயிகளுக்குச் சென்று சேர்ந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். அதேபோல, இந்தியாவில் தயாரிக்கப்படும் பல வேளாண் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். இதற்கு எல்லா மாநிலங்களும் தங்கள் பகுதியில் பருவநிலைக்கு உகந்த திட்டங்களை உருவாக்க வேண்டும். கடந்த காலங்களில் வேளாண்மை முதல் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை வரை முழுமையான வளர்ச்சி என்ற அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா காலத்திலும், வேளாண்மைத் துறை ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது என்று நரேந்திர மோடி தெரிவித்தார்.

            உற்பத்திப் பொருட்கள் வீணாவதைத் தவிர்க்க, சேமிப்புக் கிடங்கு மற்றும் பதப்படுத்தல் வசதிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். உணவுப் பொருளை அப்படியே ஏற்றுமதி செய்யாமல், பதப்படுத்திய பொருளாக ஏற்றுமதி செய்தால், லாபம் அதிகரிக்கும் என்றார் அவர். தேவையான பொருளாதார ஆதார வளங்கள் கிடைப்பது, நல்ல கட்டமைப்பு வசதி மற்றும் நவீன தொழில்நுட்பம் பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவிட சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

            சமீபத்தில் .எஸ்.பி. ஒழுங்குமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதால், நமது இளைஞர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் தொழில்நுட்பத் துறை பெரிதும் பயன் பெற்றது. பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன என்று பிரதமர் தெரிவித்தார். பூகோள ரீதியில் தகவல் தொகுப்பு சேமிப்புகளை வெவ்வேறு இடங்களில் சேமிப்பது குறித்த விதிகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டன. இதனால் நமது ஸ்டார்ட் அப்கள் மற்றும் தொழில்நுட்ப துறைகளுக்கு உதவியாக இருக்கும். சாமானிய மக்களுக்கு தொழில் செய்யும் நிலை இதன் மூலம் எளிதாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.



(Release ID: 1699625) Visitor Counter : 191