தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானவையாகவும், நம்பகத்தன்மை மிக்கவையாகவும் ஆக்குவதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு தொலை தொடர்புத்துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் தலைமை வகித்தார்

Posted On: 15 FEB 2021 5:07PM by PIB Chennai

கைபேசிகளில் வரும் விரும்பத்தகாத தகவல்கள், குறுஞ்செய்திகள் மூலம் தொடர்ந்து தொல்லை அளித்தல், மோசடியான கடன் வசதிகள் குறித்த வாக்குறுதிகள், இவை அனைத்துக்கும் மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானவையாக ஆக்குதல் ஆகியவை குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், தொலைதொடர்பு மற்றும் சட்டம் & நீதி அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் இன்று தலைமை வகித்தார்.

செயலாளர் (தகவல் தொடர்பு), உறுப்பினர் (தகவல் தொடர்பு) மற்றும் துணை தலைமை இயக்குநர் (அணுகல்  சேவை) ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விரும்பத்தகாத வர்த்தக தகவல்கள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாக தொலைதொடர்பு சந்தாதாரர்களை துன்புறுத்தும் தொலைத்தொடர்பு சந்தையாளர்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

 

தொலைதொடர்பு வசதிகளை பயன்படுத்தி நிதி மோசடிகள் செய்யப்பட்டு, சாதாரண மக்கள் பாடுபட்டு ஈட்டிய பணம் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர், இத்தகைய செயல்களை உடனடியாக நிறுத்துவதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

டெலிமார்க்கெட்டிங் மூலம் தொல்லை கொடுப்போர் மீது அபராதங்கள் விதிக்கவும், தொடர்ந்து ஈடுபட்டால் இணைப்புகளை துண்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக டிஜிட்டல் நுண்ணறிவு பிரிவு என்னும் மைய முகமை ஏற்படுத்தப்படும். உரிமை சேவை பிரிவை பொருத்தவரை, மோசடி நிர்வாகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான தொலைத்தொடர்பு தகவல் ஆய்வு அமைப்பு உருவாக்கப்படும்.

இதன் மூலம் டிஜிட்டல் சூழலியல் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை வலுப்பட்டு, கைப்பேசி மூலம் செய்யப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவையாகவும், நம்பகத்தன்மை மிக்கவையாகவும் ஆகி டிஜிட்டல் இந்தியாவை ஊக்குவிக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698158

 

-------



(Release ID: 1698190) Visitor Counter : 227