பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்துக்கு பிரதமர் ஆற்றிய பதிலுரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
08 FEB 2021 8:33PM by PIB Chennai
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே,
உலகம் முழுவதும் பல சவால்களைச் சந்தித்து வருகிறது. இப்போதைய நெருக்கடியைப் போன்ற ஒரு சூழலை உலகம் சந்திக்கும் என யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. இந்தச் சவால்களுக்கு இடையே, நமது மதிப்புக்குரிய குடியரசு தலைவர் அவர்கள், இந்தப் பத்தாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரை, இத்தகைய சவால்கள் நிறைந்த உலகில், புதிய நம்பிக்கை, துணிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.
குடியரசுத் தலைவருக்கு எனது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவிப்பதற்காக உங்களிடையே இன்று நான் நிற்கிறேன். மாநிலங்களவையில், மாண்புமிகு உறுப்பினர்கள், 13-14 மணி நேரமாக பல்வேறு அம்சங்கள் பற்றி தங்களது மதிப்பு மிக்க கருத்துக்களை எடுத்து வைத்துள்ளனர். எனவே, இந்த விவாதத்தைச் செழுமைப் படுத்திய மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் தலைவரின் உரையை அனைவரும் கவனித்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஜனநாயகத்தின் கண்ணியத்தை அது மேலும் உயர்த்தியிருக்கும். குடியரசு தலைவரின் உரையைக் கேட்கவில்லை என்று கவலைப்பட நேர்ந்திருக்காது. உரையைக் கேட்காத போதிலும், குடியரசுத் தலைவரின் உரையில் பலவற்றை சுட்டிக்காட்டும் வகையில், அவரது உரை ஆற்றல் மிக்கதாக அமைந்திருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு, ஆற்றல், வலிமை, அர்த்தம் நிறைந்த அந்த உரை அனைவரையும் சென்றடைந்துள்ளது. எனவே, இந்த உரையின் மதிப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது என நான் நம்புகிறேன்.
மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, இந்தப் பத்தாண்டில் குடியரசு தலைவர் ஆற்றிய முதல் உரை என்று நான் கூறினேன். உலகம் முழுவதையும், நமது இந்திய இளைஞர்களை இப்போது பார்க்கும் போது, அது உண்மை என்று புலப்படும். இந்தியா இன்று வாய்ப்புகள் உள்ள நாடாக காட்சியளிக்கிறது. 75வது சுதந்திர ஆண்டில் இந்தியா நுழைவது நம் அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பாகும். பாரத மாதாவின் குழந்தைகளான நாம் இதை உத்வேகத்துடனான கொண்டாட்டமாக மாற்ற வேண்டும். நூறாவது சுதந்திர ஆண்டான 2047-ல் இந்தியாவுக்கான நமது தொலை நோக்கின் உறுதி மொழிகளுக்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். உலகத்தின் பார்வை இந்தியா மீது பதிந்திருக்கிறது. இந்தியாவிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உலகத்துக்கு உள்ளன. இந்த உலகத்தின் நலனுக்கு, இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, கொரோனா பரவல் காலத்தில் உலகத்தில் ஏற்பட்ட நிலைமை, யாரும் உதவ முடியாததாக இருந்தது. ஒரு நாடு அடுத்த நாட்டுக்கு உதவ முடியாது. ஒரு மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு உதவ முடியாது. ஏன், ஒரு குடும்பத்தில் கூட ஒருவர் மற்றவருக்கு உதவ முடியாத சூழல் நிலவியது. கொரோனா அத்தகைய நிலையை ஏற்படுத்தி இருந்தது. கொரோனாவை இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கவலை உலக நாடுகளுக்கு இருந்தது. இந்தியாவால் இப்படிப்பட்ட பெருந்தொற்றைக் கையாள முடியாது என்று உலக நாடுகள் கருதின. பல கோடிப் பேர் பாதிக்கப்படுவார்கள், லட்சக்கணக்கானோர் இறப்பார்கள் என்ற அச்சம் இருந்தது. இது எப்படி ஏற்பட்டது என்பது நமது கவலை அல்ல. ஏனெனில், இப்படிப்பட்ட கண்ணுக்கு தெரியாத எதிரியை எப்படி சமாளிப்பது என்பது நமது கவலையாக இருந்தது. இதை சமாளிப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் இருந்தது.
ஒவ்வொருவரும் தொற்றைச் சமாளிக்க புதுப்புது வழிகளைக் கையாண்டனர். நாமும் பல வழிகளைக் கண்டறிய வேண்டியிருந்தது. வழியைக் கண்டு பிடித்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் கடவுளின் கருணையாலோ, ஆற்றலாலோ, நாம் மக்களைக் காப்பாற்றினோம். இப்போது, மக்களைக் காப்பதில் இந்தியா அற்புதமான முறையில் செயல்பட்டுள்ளது என்று உலகம் பாராட்டுகிறது. கொவிட் தொற்றை திறம்பட கையாண்டது, ஒரு கட்சியின் வெற்றியோ அல்லது தனி நபரின் வெற்றியோ, அல்லது ஒரு அரசின் வெற்றியோ அல்ல. இது நாட்டின் வெற்றி. இதை அவ்வாறே கொண்டாட வேண்டும். ஏழை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு வயதான தாயார், நாட்டு நலனுக்காக தெருவோரம் விளக்கை ஏற்றி வைத்திருந்ததாக சமூக ஊடகத்தில் ஒரு காட்சியைக் கண்டோம். ஆனால், நாம் அதை கேலி பேசினோம். அவரது உணர்வைக் கிண்டல் செய்தோம். பள்ளிக்குச் சென்றறியாதவர்களும் விளக்கேற்றினார்கள். அது நாட்டை விழிக்கச் செய்யும் ஒரு முயற்சி. இது தான் நமது கூட்டு முயற்சி. ஆனால், இவற்றையெல்லாம் கேலி செய்தோம். எதிர்ப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. ஆனால், நாட்டின் தார்மீக பண்பை குலைப்பதாக அந்த எதிர்ப்பு இருக்கக்கூடாது. அதனால் எந்த பலனும் கிட்டாது. அது நாட்டின் ஆற்றலைச் சீர்குலைத்து விடும்.
நம்மைச் சுற்றிலும் ஒரு அச்ச உணர்வு இருந்த போது, நமது கொரோனா வீரர்களும், முன்களப் பணியாளர்களும் ஆற்றிய தொண்டை சிறிதாக கருத முடியுமா? அவர்களது பணி அளப்பரியது, இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும், அவர்களைக் கவுரவிக்க வேண்டும். அவர்களது உழைப்பாலும், முயற்சியாலும் தான் நாடு தொற்றை வெற்றி கண்டுள்ளது. இந்தியா, போலியோ, பெரியம்மை போன்ற அச்சுறுத்தல்களை எல்லாம் கண்டு வெற்றி கண்டுள்ளது. இன்று நமது நாடு உலக நாடுகளுக்கு தடுப்பூசி தயாரிக்கிறது. மிகப் பெரிய தடுப்பூசித் திட்டத்தையும் நாம் மேற்கொண்டுள்ளோம். இது நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. கொவிட்-19 காலம், நமது கூட்டாட்சி அமைப்புக்கும் மற்றும் கூட்டாட்சி ஒத்துழைப்பு உணர்வுக்கும் புதிய பலத்தைக் கொடுத்துள்ளது.
இன்று, கொரோனா உலகத்துடனான உறவுகளில் இந்தியாவுக்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்துள்ளது. முதலில், இந்த தொற்றுக்கு எந்த மருந்து பொருத்தமாக இருக்கும் என தெரியாது. ஏனெனில், அப்போது தடுப்பூசியும் இல்லை. அப்போது, உலகின் கவனம் இந்தியா மீது திரும்பியது. இந்திய மருந்துகளுக்கு கிராக்கி ஏற்பட்டது. 150 நாடுகளுக்கு மருந்துகளை அளிக்கும் மையமாக இந்தியா மாறியது. மனித குலத்தைக் காபாற்றுவதில் இந்தியா பின்தங்கியதில்லை. இன்று, உலக நாடுகள் இந்தியாவின் தடுப்பூசியால் பலனடைந்து பெருமிதம் கொண்டுள்ளன.
மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, இந்திய ஜனநாயகம், மேற்கத்திய அமைப்பு அல்ல. ஆனால், மனித அமைப்பு. இந்திய தேசியவாதத்தின் மீதான தாக்குதல் குறித்து, நாட்டு மக்களை எச்சரிக்க வேண்டியது அவசியம். இந்திய தேசியவாதம், குறுகியதுமல்ல, சுயநலமானதும் அல்ல; கடுமையானதும் அல்ல; இது சத்யம், சிவம், சுந்தரம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது என்று முதல் சுதந்திர இந்திய அரசாங்கத்தின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூறினார். இப்போது நாம் அவரது 125-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக நேதாஜியின் வீரத்தை, அவரது கருத்துக்களை மறந்து விட்டோம். அதனால், நமக்குள் நாம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். உலகம் கூறும் சில சொற்களை நாம் பிடித்துக் கொண்டு அதையே பின்பற்றி வருகிறோம். இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறும் போது கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது. ஆனால், இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு மட்டும் அல்ல. இந்தியா ஜனநாயகத்தின் தாய். நமது அடிப்படையே ஜனநாயகம் தான். இதுதான் நமது நெறிமுறைகள். நமது நாட்டின் இயல்பே ஜனநாயகம் தான்.
நெருக்கடி நிலை காலத்தை நினைவுபடுத்திப் பாருங்கள். நீதித்துறை, ஊடகம், நிர்வாகம் ஆகியற்றின் நிலை என்னவாக இருந்தது? அனைத்தும் சிறையாக மாறியிருந்தன. ஆனால், யாராலும் மக்களை அசைக்க முடியவில்லை. ஜனநாயகத்தில் ஊறிப்போன மக்கள், வாய்ப்பு கிடைத்த போது அதைப் பயன்படுத்தினார்கள். இதுதான் ஜனநாயகத்தின் வலிமை. எந்த அரசு அதைக் கொண்டு வந்தது என்று பேசி நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. ஜனநாயக மாண்புகளை மதிக்க வேண்டும் என்பதற்காக இதைக் குறிப்பிடுகிறேன். கொரோனா காலத்தில், அன்னிய முதலீடுகள் இல்லாமல் உலக நாடுகள் இருந்தபோது, இந்தியா முதலீட்டைப் பெற்றதில் சாதனை படைத்தது. சவால்கள் பல உள்ளன. வளர்ந்த நாடுகளும் சவால்களைச் சந்தித்து வருகின்றன. ஆனால், அந்த சவால்களுக்கும், நமது சவால்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஆனால், நாம் பிரச்னையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது சவாலுக்கு தீர்வுகாண வேண்டுமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். இன்று, ஆகாயம், நிலம், நீர், விண்வெளி என எல்லா இடத்திலும் நமது திறனை நாம் நிரூபித்து வருகிறோம். துல்லிய தாக்குதல், வான் தாக்குதலில் இந்தியாவின் திறனை உலகம் பார்த்தது.
மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, 2014-ம் ஆண்டு, முதல் முறையாக இந்த அவைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எனது முதல் உரையில், எனது அரசு ஏழைகளின் நலனுக்காக உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிட்டேன். இப்போது அதை நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன். நாம் அந்தப் பாதையிலிருந்து மாறவோ, நமது நிலையை மென்மைப்படுத்திக் கொள்ளவோ இல்லை. வறுமையை அகற்ற வேண்டும் என்ற கொள்கையுடன் உழைத்து வருகிறோம். யாருடைய உதவியும் இன்றி ஏழை மக்கள் வறுமையை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும். இதுதான், எனது நோக்கம். 10 கோடி கழிவறைகளைக் கட்டியது, 41 கோடி வங்கிக் கணக்குகளை தொடங்கியது, ஏழைகளுக்கு 2 கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டியது, 8 கோடிக்கும் கூடுதலான இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கியது, ஐந்து லட்சம் ரூபாய் வரை ஏழைகளுக்கு இலவச மருத்துவக் காப்பீடு அளித்தது ஆகிய சாதனைகள் என்னை மகிழ்ச்சியடைய வைக்கின்றன.
மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, விவசாயிகளின் போராட்டம் பற்றி இந்த அவையில் ஏராளமான விவாதங்கள் நடந்துள்ளன. பல விவாதங்கள் அதைச் சுற்றியே அமைந்திருந்தன. ஆனால், இந்தப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது பற்றி அனைவரும் மவுனம் காத்தனர்.என்ன போராட்டம்? போராட்டத்தில் என்ன நடக்கிறது? இந்த விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அடிப்படை விஷயத்தைப் பற்றி விவாதம் நடந்தால் நன்றாக இருந்திருக்கும். நமது வேளாண் அமைச்சர் பல கேள்விகளை முன்வைத்தார். ஆனால், அந்த வினாக்களுக்கு அவர்களிடமிருந்து விடைகள் கிடைக்காது. விவசாயிகளுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த தேவ கவுடா அவர்கள், தமது மதிப்புமிகு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார். அரசு எடுத்து வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேளாண்மையின் அடிப்படை பிரச்சினை என்ன? அதன் மூல காரணம் என்ன? நமது முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் அவர்கள், 1971-ம் ஆண்டின் விவசாய மக்கள் தொகை குறித்து கூறினார். வேளாண் மக்கள் தொகையில், 33 சதவீதம் பேர், 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளனர். 51 சதவீதம் பேர் மிகக் குறைவான நிலம் வைத்துள்ளனர். இந்த நிலத்தை வைத்துக்கொண்டு அவர்கள் கண்ணியத்துடன் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்கள் எப்படி பிழைக்க முடியும் என அவர் கேட்டார்.
சிறு விவசாயிகளின் அவல நிலை கண்டு எப்போதும் சவுத்ரி சரண்சிங் கண்ணீர் வடித்துள்ளார். 1971-ல் ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதமாக இருந்தது. இப்போது அது 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறு, நடுத்தர விவசாயிகளின் எண்ணிக்கையையும் சேர்த்தால், அது 86 சதவீதமாக இருக்கிறது. அத்தகைய விவசாயிகள் 12 கோடிப் பேர் உள்ளனர். இந்த 12 கோடி பேரைப்பற்றி நமக்கு பொறுப்பு உள்ளதா? இவர்களுக்கான திட்டங்களை நாம் செயல்படுத்த வேண்டாமா? இந்தக் கேள்விகளுக்கான விடையை சவுத்ரி சரண்சிங் நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார். அதைப் பூர்த்தி செய்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
இந்த சிறு விவசாயிகளுக்காக முந்தைய அரசுகள் ஏதாவது செய்துள்ளனவா? தேர்தல் நெருங்கும் போது, கடன் தள்ளுபடி அறிவிப்பு இருக்கும். இது வாக்குக்காக செய்யப்படும் தந்திரம். ஆனால், கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது, சிறு விவசாயிகள் பாதிக்கப்படுவதுதான் வாடிக்கை. ஏனெனில் அவர்களுக்கு எதுவும் கிடைக்காது. வங்கிகளில் கடன் வாங்கும் விவசாயிகளுக்குத் தான் அந்த சலுகை கிடைக்கும். சிறு விவசாயிகளுக்கு வங்கி கணக்கே இல்லாத போது அவர்கள் எங்கிருந்து கடன் வாங்குவார்கள்? அரசியலுக்காக நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், சிறு விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை என்பது தான் உண்மை.
விவசாயிகளுக்கு அதிகாரமளிக்க, கடந்த 2014ம் ஆண்டு முதல், விவசாயத்துறையில், மத்திய அரசு மாற்றங்களைத் தொடங்கியது. விவசாயிகளுக்கு உதவும் வகையில், முன்பு பெயரளவுக்கு இருந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் மாற்றப்பட்டது. பிரதமரின் கிசான் திட்டமும் கொண்டு வரப்பட்டது. சிறு விவசாயிகளுக்காக அரசு எல்லா வகையிலும் பணியாற்றி வருகிறது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ரூ.90,000 கோடி பெற்றுள்ளனர். கிசான் கடன் அட்டை, மண் வள அட்டை மற்றும் சம்மான் நிதி ஆகியவை மூலம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் சாலை இணைப்புகள் மேம்பட்ட போது, விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை தொலைதூரப் பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிந்தது. கிசான் ரயில், கிசான் உடான் போன்ற திட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இப்போதைய தேவை, சிறு விவசாயிகளின் வாழ்க்கையை முன்னேற்றுவதுதான். பால் வளத்துறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது போன்ற சுதந்திரத்தை விவசாயிகள் ஏன் பெறக் கூடாது?
நமது மதிப்புக்குரிய சரத் பவார் அவர்களும், காங்கிரசைச் சேர்ந்த அனைவரும், ஒவ்வொரு அரசும் வேளாண் சீர்திருத்தங்களுக்காக வாதிட்டவர்கள் தான். சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ஒவ்வொருவரும் வலியுறுத்தி வந்தார்கள். அதுதான் இப்போது நடந்துள்ளது. சரத் பவார் சீர்திருத்தங்களை ஆதரிப்பதாகக் கூறினார். அவர் ஒருபோதும் சீர்திருத்தங்களை எதிர்க்கவில்லை. இப்போது செய்யப்பட்டுள்ளதே சரியானது என யாரும் கூறமுடியாது. இதைவிட நல்லவை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாம். எல்லாமே மாறக்கூடியதுதான்.
மதிப்புக்குரிய டாக்டர் மன்மோகன் சிங் இங்கு உள்ளார். அவர் பேசியதை நான் இங்கே குறிப்பிடுகிறேன். நான் கூறுவதை வேண்டுமானால், முந்தைய நிலையை மாற்றிக் கொண்ட சிலர் எதிர்க்கலாம். ஆனால், இது மன்மோகன் சிங் அவர்கள் கூறியது. விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை விற்பதற்கான தடைக்கல்லை நாம் அகற்ற வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். அதாவது, விவசாயிகள் தங்கள் பொருட்களை விற்பதற்குரிய சுதந்திரத்தை வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம். இதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். மன்மோகன் சிங் சொன்னதை மோடி செய்துள்ளதற்கு நீங்கள் பெருமைப்பட வேண்டும்.
விவசாயத் துறையின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக பணியாற்ற வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தது, தற்போதும் உள்ளது, அது எதிர்காலத்திலும் தொடரும். ஏழைகளுக்கான மலிவு விலை ரேஷன் திட்டமும் தொடரும். மண்டிகள் நவீனமயமாக்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் செயல்பட வேண்டும்.
சில சக்திகள் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. சீக்கியர்களின் பங்களிப்பை எண்ணி நாடு பெருமைப்படுகிறது. இது நாட்டுக்காக அதிக சேவை செய்த சமுதாயம். குரு சாஹிப்புகளின் போதனைகளும், ஆசிர்வாதங்களும் விலை மதிப்பற்றது. நகர்ப்புறம், கிராமப்புறம் இடையேயான வேறுபாட்டை நீக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
இளைஞர்களை வலுப்படுத்தும் முயற்சிகள், நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை அளிக்கும். அதேபோல், தேசிய கல்விக் கொள்கை விரைவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது வரவேற்கத்தக்கது.
பொருளாதார மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை முக்கியம். அதில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அதனால்தான், கொரோனா காலத்தில், அத்துறையை ஊக்குவிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
அனைவருக்குமான வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமாகும். நக்சல் பாதிப்பு பகுதிகளிலும், வடகிழக்குப் பகுதிகளிலும், இயல்பு நிலையைக் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அங்கு நிலைமை மேம்பட்டு வருவதுடன், பல துறைகளில் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வரும் காலத்தில், நாட்டின் வளர்ச்சியில், கிழக்குப் பகுதிகள் முக்கிய பங்காற்றும்.
மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, இந்த அவையில் மதிப்புமிக்க உரையாற்றிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நாட்டின் 130 கோடி மக்களின் கனவு நாட்டின் கனவு. 130 கோடி மக்களின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. மீண்டும் ஒரு முறை குடியரசு தலைவரின் உரைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நன்றிகள் பல!
பொறுப்பு துறப்பு; இது பிரதம் உரையின் தோராயமான மொழி பெய்ர்ப்பு. மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***
(Release ID: 1697484)
Visitor Counter : 562
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam