பிரதமர் அலுவலகம்

கனடா நாட்டுப் பிரதமர் மேதகு ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு

Posted On: 10 FEB 2021 11:07PM by PIB Chennai

கனடா நாட்டுப் பிரதமர் மேதகு ஜஸ்டின் ட்ரூடோவிடமிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பு வந்தது.

இந்தியாவிலிருந்து, கொவிட்-19 தடுப்பு மருந்துகள் கனடாவுக்கு தேவைப்படுவது குறித்து திரு.ட்ரூடோ பிரதமரிடம் தெரிவித்தார். ஏற்கனவே பல நாடுகளுக்கு உதவி செய்தது போலவே, கனடாவின் தடுப்பூசிப் பணிகளுக்கும், இந்தியா அனைத்து வித உதவிகளையும் செய்யும் என்று பிரதமர், கனடப் பிரதமரிடம் உறுதியளித்தார்.

கொவிட்-19ஐ உலகம் வெற்றிகரமாக சமாளிக்குமானால், அதில் கணிசமான பங்கு, இந்தியாவின் அளப்பரிய மருந்துப் பொருள் உற்பத்திக்கும், இந்த உற்பத்தித் திறனை உலகத்துடன் பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு மோடியின் தலைமைத்துவத்துக்கும் தான் உள்ளது என்று பிரதமர் திரு ட்ரூடோ பாராட்டினார். பிரதமர் திரு ட்ரூடோவுக்கு நன்றி கூறினார்.

முக்கியமான பல புவி-அரசியல் விசயங்களில் இந்தியாவுக்கும், கனடாவுக்கும் பொதுவான கருத்து இருப்பதை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். பருவநிலை மாற்றம், பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கங்கள் போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இரண்டு நாடுகளும்  நெருக்கமாக இணைந்து செயல்படுவது தொடரும் என்று இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் முக்கியமான பல சர்வதேச அரங்குகளில் இருவரும் சந்திக்கும் வாய்ப்புகளையும், இருதரப்பு நலன் சார்ந்த அனைத்து விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதையும், எதிர்நோக்கி இருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.(Release ID: 1697044) Visitor Counter : 54