நிதி அமைச்சகம்

நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கத் திட்டம்

Posted On: 01 FEB 2021 1:48PM by PIB Chennai

மெட்ரோ ரயில் சேவை மற்றும் மாநகரப் பேருந்து சேவைகள் மூலம் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சரும், நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சருமான திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இதற்காக ரூ.18,000 கோடி மதிப்பில் “பொதுப் பேருந்து சேவை” என்ற புதிய திட்டம் விரைவில் செயல்படுத்த இருப்பதாகவும், தனியார் பங்களிப்பு மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகளை வாங்குவது, இயக்குவது, அவற்றை பராமரிப்பது போன்ற பணிகளில் தனியாரை அனுமதிக்க உத்தேசித்திருப்பதாக தெரிவித்தார்.  இதன் மூலம் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி அடைவதோடு பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வேலைவாய்ப்பு உருவாகி இளைஞர்கள் மற்றும் நகர்ப்புறவாசிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என குறிப்பிட்டார்.

அதோடு நாடு முழுவதும் மெட்ரோ ரயிலின் சேவைகள் விரைந்து செயல்படுத்தப்படுவதாகவும், இதுவரை 702 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாரம்பரிய மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் 1,016 கிலோ மீட்டர் தொலைவு மற்றும் 27 முக்கிய நகரங்களில் மண்டல விரைவு போக்குவரத்து முறையை செயல்படுத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் “மெட்ரோ லைட்”  மற்றும் “மெட்ரோ நியோ” என்ற இரண்டு புதிய வகையிலான போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த  அரசு திட்டமிட்டிருப்பதாகவும் இதன் மூலம் முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான செலவினத் தொகை பெருமளவு குறையும் என்றும் அவர் கூறினார்.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு:

1. 11.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள கொச்சி மெட்ரோ ரயில் சேவை திட்டம்-2-க்கு ரூ.1957 கோடி நிதி ஒதுக்கீடு

2. 118.9 கிலோ மீட்டர் தொலைவுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டம்-2-க்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு

3. 58.19 கிலோ மீட்டர் தொலைவுள்ள பெங்களூரூ மெட்ரோ ரயில் திட்டம் 2ஏ மற்றும் 2பி-க்கு ரூ.14,788 கோடி நிதி ஒதுக்கீடு.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693893


(Release ID: 1693985) Visitor Counter : 286