பிரதமர் அலுவலகம்

பிரபுத்த பாரதா-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் உரையாற்றினார்


சுவாமி விவேகானந்தர் இந்த சஞ்சிகையை அறிமுகப்படுத்தினார்
ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தியா, சுவாமி விவேகானந்தரை பின்பற்றுகிறது: பிரதமர்

பெருந்தொற்று மற்றும் பருவகால மாற்றத்தின் போது இந்தியாவின் அணுகுமுறை சுவாமி விவேகானந்தரின் அணுகுமுறையை ஒத்து இருக்கிறது: பிரதமர்

அச்சமின்றி, சுய- நம்பிக்கையுடன் செயல்பட இளைஞர்கள் சுவாமி விவேகானந்தரின் போதனைகளைப் பின்பற்ற வேண்டும்: பிரதமர்

Posted On: 31 JAN 2021 3:46PM by PIB Chennai

சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ணா இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான பிரபுத்த பாரதா-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் மனவுறுதியை வெளிப்படுத்துவதற்காக பிரபுத்த பாரதா என்று சஞ்சிகைக்கு சுவாமி விவேகானந்தர் பெயர் சூட்டியதாகத் தெரிவித்தார். அரசியலுக்கும், பிராந்திய எல்லைகளுக்கும் அப்பாற்பட்ட விழித்தெழுந்த இந்தியாவைஅவர் உருவாக்க விரும்பினார். பல நூற்றாண்டுகளாக கலாச்சார உணர்வுகளுடன் இந்தியா வாழ்ந்து கொண்டிருப்பதாக அவர் கண்டிருந்தார்”, என்று பிரதமர் கூறினார்.

மைசூர் மகாராஜாவிற்கும், சுவாமி ராமகிருஷ்ணானந்தாவுக்கும் சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதங்களைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர்ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதில் சுவாமியின் அணுகுமுறை குறித்து இரண்டு தெளிவான சிந்தனைகளை சுட்டிக்காட்டினார். முதலாவதாக, ஏழைகள் அவர்களாகவே சுலபமாக அதிகாரத்தை அடைய  முடியாதெனில், அவர்களுக்கு அதிகாரம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இரண்டாவதாக இந்தியாவின் ஏழைகள் குறித்து அவர் கூறுகையில், “அவர்களுக்கு எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களை சுற்றிய உலக நிகழ்வுகள் குறித்து அவர்களது பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்; அதன் பிறகு அவர்களது நல்வாழ்விற்கான பணிகளை அவர்களே மேற்கொள்வார்கள்என்று குறிப்பிட்டார். இந்த அணுகுமுறையுடன் தான் இந்தியா தற்போது முன்னேறிக் கொண்டிப்பதாக பிரதமர் தெரிவித்தார். ஏழைகளால் வங்கிகளுக்குச் செல்ல முடியவில்லையெனில், வங்கிகள் ஏழைகளின் இருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். இதைத்தான் ஜன்தன் திட்டம் செயல்படுத்தியது. ஏழைகளால் காப்பீடு பெற முடியாத பட்சத்தில், காப்பீடு ஏழைகளிடம் செல்ல வேண்டும். இதைத்தான் ஜன் சுரக்ஷா திட்டங்கள் செயல்படுத்துகின்றன. ஏழைகளால் சுகாதாரத்தை பெற முடியாவிட்டால், சுகாதாரத்தை நாம் ஏழைகளிடம் கொண்டுச் செல்ல வேண்டும். இந்தப் பணியைத்தான் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்துகிறது. சாலைகள், கல்வி, மின்சாரம் மற்றும் இணைய இணைப்புகள் ஆகியவை நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் குறிப்பாக ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன. இது ஏழைகளிடையே ஆசையைத் தூண்டுகின்றது. இந்த ஆசைகள் தான் நாட்டு வளர்ச்சியின் உந்து சக்தியாக விளங்குகிறது”, என்று பிரதமர் வலியுறுத்தினார்.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் இந்தியா மேற்கொண்ட தீவிர முயற்சிகள், நெருக்கடியின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற சுவாமி அவர்களின் அணுகுமுறைக்கு உதாரணமாக திகழ்ந்தது என்று திரு மோடி கூறினார். பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சனையில் புகார்களை எழுப்பாமல் சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியின் வடிவில் இந்தியா தீர்வு காண முயற்சித்தது. இவ்வாறான சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பார்வையான விழித்தெழுந்த இந்தியா கட்டமைக்கப்படுகிறது.  இதுதான் உலக பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் இந்தியா”, என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா பற்றி சுவாமி விவேகானந்தர் கொண்டிருந்த பெரிய கனவுகளும், இந்திய இளைஞர்கள் மீதான அவரது நம்பிக்கையும் இந்திய வர்த்தக தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் பலரிடம் பிரதிபலிப்பதாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

பின்னடைவுகளை சமாளிப்பது, அதை கற்றலின் திருப்பு முனையின் ஒரு பகுதியாக பார்ப்பது போன்றவற்றை, நடைமுறை வேதாந்தங்கள் பற்றிய சொற்பொழிவில், தெரிவித்துள்ள  சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைகளை இளைஞர்கள் பின்பற்றி முன்னேறுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மக்களிடம் புகுத்த வேண்டிய இரண்டாவது விஷயம், அச்சமின்மை மற்றும் தன்னம்பிக்கை. உலகுக்கு பயனுள்ள ஒன்றை உருவாக்கி உண்மையான நிலைத்தன்மையை அடைந்த சுவாமி விவேகானந்தரை இளைஞர்கள் பின்பற்றுமாறு திரு மோடி  வலியுறுத்தினார். ஆன்மீகம், பொருளாதார முன்னேற்றத்தை சுவாமி விவேகானந்தர்  தனித்தனியாக பார்க்கவில்லை என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மிக முக்கியமாக, மக்களை ஏழ்மையாக்கும் அணுகுமுறைக்கு அவர் எதிராக இருந்தார். சுவாமி விவேகானந்தரை ஓர் ஆன்மீக குரு என்றும், மிக உயர்ந்த ஆன்மா என்றும் குறிப்பிட்ட பிரதமர், ஆனாலும், ஏழைகளுக்கான பொருளாதார முன்னேற்றம் குறித்த கருத்தை அவர் கைவிடவில்லை என்றும் வலியுறுத்தினார்.

125 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருக்கும் பிரபுத்த பாரதா, சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளை பரப்பி வருவதாகக் கூறி தமது உரையை திரு மோடி நிறைவு செய்தார்.  இளைஞர்களுக்கு கல்வி வழங்கி, நாட்டை எழுச்சி பெற வைக்க வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பார்வையை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை, அழியாமல் இருக்கச் செய்வதில், பிரபுத்த பாரதா முக்கிய பங்காற்றி வருகிறது.

*************************



(Release ID: 1693761) Visitor Counter : 190