பிரதமர் அலுவலகம்

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்


கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை தன்னம்பிக்கை, தற்சார்பின் வெளிப்பாடு: பிரதமர்

இந்த அளவிலான தடுப்பூசித் திட்டத்தை உலகம் இதுவரை கண்டதில்லை: பிரதமர்

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது: பிரதமர்

கொரோனா முன்கள போராளிகளுக்கு மரியாதை செலுத்தினார்

Posted On: 16 JAN 2021 12:19PM by PIB Chennai

தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் இத்திட்டம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டமாகும். தொடக்க விழாவின்போது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்தம் 3006 மையங்கள் காணொலி வாயிலாக இணைக்கப்பட்டன.

தடுப்பூசியின் தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் தமது உரையைத் துவக்கினார். பொதுவாக தடுப்பூசியைக் கண்டுபிடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும், ஆனால் தற்போது குறுகிய காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.  தடுப்பூசிகளின்  இரண்டு கட்டங்களையும் பொதுமக்கள் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்தார். இரண்டு கட்டங்களுக்கும் இடையே ஒரு மாத இடைவெளி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இரண்டாம் கட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு இரண்டு வாரங்கள் கழித்தே கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் ஏற்படும் என்பதால் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் முதல் சுற்றிலேயே மூன்று கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாகவும், நூறு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட  இந்த எண்ணிக்கை  கூடுதலானது என்றும் பிரதமர் கூறினார். இரண்டாம் சுற்றில் முதியவர்களுக்கும் இதர உடல் உபாதைகள் இருப்பவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும்போது இந்த எண்ணிக்கை 30 கோடியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகளில் மட்டும்தான் 30 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், மருத்துவ முறை, இந்திய வழிமுறைகள், நிறுவன நடைமுறைகள் போன்றவற்றின் மீதான தொடர் கண்காணிப்பு ஆவணத்தின் வாயிலாக உலக அளவில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதால் புரளிகள், சூழ்ச்சிகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக ஒற்றுமையுடனும் தைரியத்துடனும் நாடு போராடியதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கை தன்னம்பிக்கை, தற்சார்பின் வெளிப்பாடாக அமைவதாக அவர் குறிப்பிட்டார். எந்த ஒரு இந்தியரின் தன்னம்பிக்கையையும் வலிமையிழக்கச் செய்யக்கூடாது என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார். மருத்துவர்கள் செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், அவசர சிகிச்சை ஊர்தி ஓட்டுனர்கள், ஆஷா பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவலர்கள், இதர முன்கள பணியாளர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாது பிறரை காப்பாற்றி அவர்கள் ஆற்றிய பங்கை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.  இவர்களில் ஒரு சிலர் தங்கள் வீடுகளுக்கும் செல்லாமல் கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிரையும் நீத்தனர் என்று பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மனச்சோர்வும் அச்சமும் நிலவிய சூழ்நிலையில் முன்கள பணியாளர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், அவர்களது பங்கைப் போற்றும் வகையில் தற்போது முதலாவதாக அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் திரு மோடி கூறினார்.

நெருக்கடிக் காலத்தின் தொடக்க நாட்களை நினைவுகூர்ந்த பிரதமர் இந்தியா விழிப்புடன் செயல்பட்டு தக்க நேரத்தில் சரியான முடிவுகளை மேற்கொண்டதாகக் கூறினார். கடந்த 2020 ஜனவரி 30-ஆம் தேதி நாட்டின் முதல் பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு வாரங்கள் முன்பே உயர் மட்ட குழுவை இந்தியா அமைத்தது. இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இந்தியா முறையான கண்காணிப்பைத் துவக்கியது. 2020 ஜனவரி 17-ஆம் தேதி இந்தியா தனது முதல் ஆலோசனையை வழங்கியதுடன் விமான நிலையங்களில் பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளையும் இந்தியா முதல் நாடாக தொடங்கியது.

 

பொது முடக்கத்தின்போது சவாலான  ஒழுக்கத்தையும், பொறுமையையும் குடிமக்கள் கடைப்பிடித்ததற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். இந்த பயிற்சி உளவியல் ரீதியாக பொது முடக்கத்திற்கு நாட்டை தயார் செய்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். ஓசை எழுப்புதல், விளக்குகளை ஏற்றுதல் போன்ற பிரச்சாரங்களின் வாயிலாக நாட்டின் ஒழுங்கு உணர்வு பின்பற்றப்பட்டதாக பிரதமர் மேலும் கூறினார்.

வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீண்டும் திரும்பச் செய்தது பற்றியும் திரு மோடி பேசினார். ஏராளமான நாடுகள் தங்கள் குடிமக்கள் சீனாவில் சிக்கியிருந்த போது கவலை கொள்ளாத நேரத்தில் இந்தியர்களை மட்டுமல்லாமல் பிற நாட்டினரையும் இந்தியா பத்திரமாக அழைத்து வந்தது. ஒரு நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை பரிசோதிப்பதில் பிரச்சினைகள் எழுந்த நிலையில் அந்த நாட்டிற்கு ஓர் ஆய்வகத்தையே இந்தியா அனுப்பி வைத்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் கூறினார். மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகள், அரசு அதிகாரிகள், சமூக வாரியங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மற்றும் ஒற்றுமையான நடவடிக்கைகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

உரை நிகழ்த்திய பிறகு பிரதமர் தமது சுட்டுரைச் செய்தியில், “உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் திட்டத்தை இந்தியா தொடங்குகிறது. நமது விஞ்ஞானிகளின் செயல்திறனையும், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு ஊழியர்களின் கடுமையான உழைப்பினையும் கொண்டாடும் ஓர் பெருமைமிகு தினமாக இது அமைகிறது. அனைவரும் உடல் நலத்துடனும் நோயின்றி வாழட்டும்.”

உலகளாவிய சுகாதாரம், மகிழ்ச்சி மற்றும் துன்பத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வேத பிரார்த்தனையான-

சர்வே பவந்து சுகின: சர்வே சந்து நிராமயா:!

சர்வே பத்ராணி பச்யந்து மா கஸ்சித் துக்கபாக் பவேத்

என்று குறிப்பிட்டுள்ளார்.

-------


(Release ID: 1689072) Visitor Counter : 326