வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்திய ஸ்டார்ட் அப் சூழலியல் கடந்த 5 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது: திரு பியுஷ் கோயல்

Posted On: 15 JAN 2021 3:44PM by PIB Chennai

ஸ்டார்ட் அப் எனப்படும் புது நிறுவனங்களுக்கான 'பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டை' மத்திய ரயில்வே, வர்த்தகம், தொழில்கள், நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார்.

ஸ்டார்ட் அப் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்திய ஸ்டார்ட் அப் சூழலியல் கடந்த 5 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளதாக இரண்டு நாள் மாநாட்டை துவக்கி வைத்து பேசிய திரு பியுஷ் கோயல் கூறினார்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்னும் கொள்கையை பறைசாற்றுவதாக இந்த மாநாடு அமைந்துள்ளது என்று கூறிய அமைச்சர், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான கூட்டை இம்மாநாடு வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய சிந்தனைகளை கொண்டுள்ள ஸ்டார்ட் அப்புகள் உற்சாகத்துடன் புதுமைகளை படைத்து வருவதாகவும், பெருந்தொற்றின் போது அவை சிறப்பான பங்காற்றியதால் சரியான சமயத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

 

41,000-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்புகள் அரசுடன் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் அதிக அளவில் புது நிறுவனங்கள் அடிமட்ட அளவில் செயல்பட்டு சிறப்பான பணியை செய்து வருவதாகவும் திரு கோயல் கூறினார்.

மத்திய விமான போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹரதீப் சிங் புரி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு சோம் பர்காஷ் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் உரையாற்றினர்.

 

பிராரம்ப்: ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச உச்சி மாநாட்டில் 2021 ஜனவரி 16 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றவிருக்கிறார். இம்மாநாட்டின் போது ஸ்டார்ட் அப்புகளை சேர்ந்தவர்களுடன் பிரதமர் உரையாடுவார்.

வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையால் ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடத்தப்படுகிறது. பிம்ஸ்டெக் ஸ்டார்ட் அப் உச்சி மாநாட்டை நடத்த இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று ஆகஸ்ட் 2018-இல் காத்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் உறுதியளித்தவாறு இந்த இரண்டு நாள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2016 ஜனவரி 16 அன்று பிரதமரால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா முன்னெடுப்பின் ஐந்தாவது ஆண்டில் இந்த உச்சி மாநாடு குறிக்கிறது. 25-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 200-க்கும் அதிகமான சர்வதேச வல்லுநர்கள் பங்குபெறும் இந்த உச்சி மாநாடு ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதற்கு பின்பு நடைபெறும் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிகழ்ச்சி ஆகும்.

 

ஸ்டார்ட் அப் சூழலியல்களை உருவாக்கி வலுப்படுத்தும் விதமாக, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு இடயே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டை மேம்படுத்தும் வகையில் 24 அமர்வுகள் இந்த உச்சிமாநாட்டில் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688799

------


(Release ID: 1688837) Visitor Counter : 364