சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 நிலவரம் மற்றும் தடுப்பு மருந்து தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு


லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மக் பிஹு ஆகிய பண்டிகைகளுக்கு பிறகு தடுப்பு மருந்து வழங்குதல் 2021 ஜனவரி 16 அன்று தொடங்கவிருக்கிறது

சுமார் 3 கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை

அதன் பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டோர், ஐம்பது வயதிற்கு குறைவாக உள்ளோரில் இணை நோயுற்ற தன்மை உடையோர் உள்ளிட்ட சுமார் 27 கோடி பேருக்கு தடுப்புமருந்து வழங்கப்படும்

Posted On: 09 JAN 2021 4:17PM by PIB Chennai

கொவிட்-19 நிலவரம் மற்றும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கொவிட்-19 தடுப்பு மருந்து தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக உயர்மட்ட கூட்டம் ஒன்றுக்கு பிரதமர் இன்று தலைமை தாங்கினார். அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் இதர முக்கிய அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பல்வேறு விஷயங்கள் சார்ந்த கொவிட் மேலாண்மை குறித்த நிலைமையை விரிவான முறையில் பிரதமர் ஆய்வு செய்தார். பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நிரூபித்த இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு (கொவிஷீல்ட் மற்றும் கொவாக்சின்) அவசரகால ஒப்புதலை தேசிய ஒழுங்குமுறை அமைப்பு வழங்கியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தடுப்பு மருந்து விநியோகத்தை தொடங்குவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் நெருங்கி பணிபுரிந்து தயார் நிலையில் மத்திய அரசு உள்ளதாக பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. மக்கள் பங்கேற்பு, தேர்தல் கால அனுபவத்தை பயன்படுத்துதல் மற்றும் நாடு தழுவிய தடுப்புமருந்து திட்டம் ஆகியவற்றின் கோட்பாடுகளை சார்ந்து தடுப்புமருந்து நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுகாதார சேவைகள் எந்த பாதிப்பும் அடையாதவாறு, அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் எந்தவித மீறல்களும் இல்லாத வகையில், நிலையான செயல்பாட்டு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒழுங்கான மற்றும் சுமூகமான வகையில் தடுப்பு மருந்து திட்டம் செயல்படுத்தப்படும்.

சுமார் 3 கோடி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்குதலில் முன்னுரிமை அளிக்கப்படும். அதன் பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டோர், ஐம்பது வயதிற்கு குறைவாக உள்ளோரில் இணை நோயுற்ற தன்மை உடையோர் உள்ளிட்ட சுமார் 27 கோடி பேருக்கு தடுப்புமருந்து வழங்கப்படும்.

கொவிட் தடுப்பு மருந்து விநியோக மேலாண்மை முறை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. இந்த பிரத்யேக டிஜிட்டல் தளத்தில் கொவிட் தடுப்பூசிகள் இருப்பு நிலவரம், அவற்றின் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி பயனாளிகளை கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்ட மேலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இந்த மென்பொருள் வழங்கும். 79 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் இந்த தளத்தில் தங்களை ஏற்கனவே பதிவு செய்து கொண்டுள்ளனர்.

தடுப்பு மருந்து வழங்குவோர் மற்றும் நிர்வகிப்போர் தடுப்பு மருந்து வழங்குதல் நடவடிக்கையின் முக்கிய தூணாக விளங்குவதால், அவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கப்பட்டது. பல்வேறு அதிகாரிகளை உள்ளடக்கிய தேசிய அளவிலான பயிற்சியில் 2,360 பேர் பங்கேற்றனர். 61,000-க்கும்  அதிகமான திட்ட மேலாளர்கள், 2 லட்சம் தடுப்பு மருந்து வழங்குபவர்கள் மற்றும் 3.7 லட்சம் இதர தடுப்பு மருந்து குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் வட்டார அளவில் பயிற்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் குறித்தும் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. மூன்றாவது கட்ட ஒத்திகை 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 615 மாவட்டங்களில் இருக்கும் 4,895 மையங்களில் நேற்று நடத்தப்பட்டது.

விரிவான ஆய்வுக்கு பின்னர், லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், மக் பிஹு ஆகிய பண்டிகைகளுக்கு பிறகு தடுப்பு மருந்து வழங்குதல் 2021 ஜனவரி 16 அன்று தொடங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

**********************(Release ID: 1687314) Visitor Counter : 301