சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்து விநியோகம்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் உரையாடிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், நாளை நடைபெறவுள்ள ஒத்திகைக்கு அவர்களது முழு ஒத்துழைப்பை கோரினார்

Posted On: 07 JAN 2021 5:10PM by PIB Chennai

நாளை (2020 ஜனவரி 8) நடைபெறவுள்ள கொவிட்-19 தடுப்பு மருந்து விநியோக ஒத்திகை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலாளர்கள் / கூடுதல் தலைமை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் இன்று உரையாடினார்.

ஒட்டுமொத்த ஒத்திகை நடவடிக்கையை தலைமையேற்று நடத்துமாறு அவர்களை அவர் கேட்டுக்கொண்டார். 33 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 736 மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பு மருந்துக்கான இரண்டாவது ஒத்திகை மூன்று கட்டங்களாக நாளை நடைபெறுகிறது.

தடுப்பூசி விநியோகிக்கும் திறன் மற்றும் மேலாண்மையை உறுதி செய்வதற்காக இந்த ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது. பயனாளிகளின் பதிவு, திட்டமிடப்பட்ட இடங்களில் தடுப்பூசி போடுவது உட்பட ஒட்டுமொத்த தடுப்பூசி திட்டம், மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் பரிசோதிக்கப்படும்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் தமிழக சுகாதார அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கொவிட்டுக்கான கூட்டு கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம் 2020 ஜனவரி 8 அன்று நடைபெற்ற நிலையில், கடந்த ஒரு வருடமாக பெருந்தொற்றை எதிர்த்து நாடு வெற்றிகரமாக போராடி வருகிறது என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.

முன்கள பணியாளர்களின் ஓய்வில்லா உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் பாராட்டு தெரிவித்த அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் துடிப்பான மற்றும் உறுதியான தலைமையின் கீழ் உலகத்திலேயே அதிகளவு குணமடைதல்களை இந்திய கண்டுள்ளதை குறித்தும், என்-95 முகக்கவசங்களுக்காக இந்தியாவை எதிர்நோக்கியுள்ள இதர நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக திகழ்வது குறித்தும் தெரிவித்தார். பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு புகழ் சேர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள ‘கோ-வின்’ என்ற மென்பொருளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்றும் இதில் கொவிட் தடுப்பூசிகள் இருப்பு நிலவரம், அவற்றின் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி பயனாளிகளை கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிய டாக்டர் ஹர்ஷ் வர்தன் தடுப்பூசி திட்ட மேலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இந்த மென்பொருள் வழங்கும் என்று கூறினார்.

2021 ஜனவரி 17 அன்று திட்டமிடப்பட்டுள்ள தேசிய நோயெதிர்ப்பு தினத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கும்படி மாநில அமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டார். கொவிட் சாராத அத்தியாவசிய சேவைகள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்ளும் படி அமைச்சர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஒத்திகை நடவடிக்கைகளில் தங்களது அனுபவங்களையும், நாளைய ஒத்திகைக்கான தயார்நிலையையும் அமைச்சர்கள் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1686812

****(Release ID: 1686912) Visitor Counter : 207